தொடர்களில் நாயகிகள் 
சிறப்புக் கட்டுரைகள்

2025-ல் அறிமுகமான சின்ன திரை தொடர்கள்!

2025ஆம் ஆண்டில் நிறைவடைந்து புதிதாக தொடங்கப்பட்ட தொடர்கள் குறித்து...

எஸ். மணிவண்ணன்

இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படுவது சின்ன திரை தொடர்கள். ஆனால், தற்போது அவை இளம் தலைமுறையினரைக் கவரும் தலையாய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலான திரைக்கதை வடிவம் கொடுக்கப்படுவதால், சமூக வலைதளங்களிலும் சின்ன திரை தொடர்களின் நாயகிகள், அவர்களின் காட்சிகள் அதிகம் பகிரப்படுகின்றன. ஒருபடி மேலே சென்று தொடர்களுக்கும், அதன் நடிகர், நடிகைகளுக்கும் சமூக வலைதளங்களில் தனியாக கணக்குகளே தொடங்கப்படுகின்றன. அதனை அதன் ரசிகர்களே மேலாண்மை செய்கின்றனர்.

மக்கள் மனங்களைக் கவருபவர்களே பிரபலங்கள் ஆகின்றனர். அந்தவகையில் வயது வித்தியாசமின்றி இல்லத்தரசிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை கவர்ந்திழுப்பதால், சின்ன திரை தொடர்களுக்கு முன்பை விட ரசிகர்களும் அதிகம் ஆதரவும் அதிகம் என்றே சொல்லலாம். முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான தொடர்கள் (சனி, ஞாயிறு வார இறுதிகளில் கூட) ஒளிபரப்பாவதே இதற்குச் சான்று.

இதற்கு சின்ன திரையின் மீது எழுந்துள்ள மிகப் பெரிய வணிக முதலீடும் மற்றொரு காரணம் எனலாம். ஆனால், அவையும் ரசிகர்களாகிய மக்களைக் குறி வைத்தே இருப்பதால், சின்ன திரை தொடர்கள் தவிர்க்க முடியாததாகின்றன.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களே சின்ன திரை நாயகிகளாக மாறி வந்தனர். அந்த காலம் தற்போது மாறிவிட்டது. சின்ன திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குச் செல்லும் காலம் வந்துவிட்டது. அந்த அளவு தொடர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அங்கீகரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மக்கள் மனங்களைக் கவர அறிமுகமான தொடர்கள், நாயகிகள் குறித்து காணலாம்.

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் 2025 ஆண்டு பிறந்ததிலிருந்தே அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார். அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

 அண்ணாமலை குடும்பம்

தெலுங்கு மொழியில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக தமிழில் அண்ணாமலை குடும்பம்  எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடரில் ரூபாஸ்ரீ மாமியாராகவும், யுக்தா மற்றும் விஜே. தீபிகா நாயகிகளாகவும் நடிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண்ணுக்கும் அவர் வீட்டுக்குள் வரும் மருமகள்களுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி  இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

சின்னஞ்சிறு கிளியே

ஜீ தமிழில் திங்கள் - வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது. பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு விநியோகம், டியூஷன் எடுப்பது எனப் பல வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நிர்வகித்து வரும் பெண், ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு திருமணமாகிச் சென்று, அங்கு அவர் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் கதைக்களமாக உள்ளது. இத்தொடரில் ஸ்வாதிகா நாயகியாகவும், நரேஷ் நாயகனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்டப் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாரிஜாதம்

சின்ன திரையில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக  உள்ள ஆல்யா மானசாவின் தொடர் இது.  இத்தொடரில் ஆல்யா மானசாக்கு ஜோடியாக ரக்‌ஷித் நடிக்கிறார். இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. காது கேளாத பெண்மணியாக இதில் ஆல்யா நடிக்கிறார். அவரின் நடிப்புத் திறனுக்கு தீனி போடும் பாத்திரமாக இது அமைந்துள்ளது.

மகளே என் மருமகளே

இதுவரை கொடுமைக்கார மாமியார்களையே சின்ன திரைகள் காட்டி வந்த நிலையில், இத்தொடரில் மருமகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மாமியார் வருகிறார். இவர்களுக்கு இடையிலான பாசப்பிணைப்பே தொடரின் மையக்கரு. இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார். இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

செல்லமே செல்லமே

பூவே பூச்சூடவா, கிழக்கு வாசல் உள்ளிட்டத் தொடர்களை அடுத்து செல்லமே செல்லமே என்ற தொடரில் ரேஷ்மா நடிக்கிறார். சுந்தரி தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஜிஷ்ணு மேனன் இத்தொடரில் நாயகனாக நடிக்கிறார். சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆடுகளம்

படங்களில் நடித்து பிரபலமான டெல்னா டேவிஸ், அன்பேவா தொடருக்குப் பிறகு ஆடுகளம் தொடரில் நாயகியாக நடிக்கிறார். டெல்னா டேவிஸுக்கு ஜோடியாக மெளன ராகம் -2 தொடர் நாயகன் சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார். மேலும், முக்கிய பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர் வாரத்தில் 7 நாள்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தனம் 

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சத்யா தேவராஜன் நாயகியாக தனம் தொடரில் நடிக்கிறார். ஸ்ரீ குமார் நாயகனாக நடிக்கும் இத்தொடரில், கணவர் மறைவுக்குப் பிறகு அவரின் ஆட்டோவை ஓட்டி, கணவரின் வீட்டை கவனித்துக்கொள்ளும் மருமகளின் கதையே தனம் தொடரின் மையக்கரு. விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பூங்கொடி

பூவா தலையா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வேதா, பூங்கொடி தொடரில் நாயகியாக நடிக்கிறார்.  நாதஸ்வரம் தொடரில் நடித்து கவனம் பெற்ற பாண்டி கமல் நாயகனாக நடிக்கிறார். புது வசந்தம் படத்தில் நடித்து புகழ் பெற்ற புகழ் சித்தாரா இத்தொடரில் அம்மா பாத்திரத்தில் நடிக்கிறார். காயத்ரி கிருஷ்ணன் மாமியாராக நடிக்கிறார். இத்தொடர் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வினோதினி

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர். சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற எவ்வாறு போராடுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்த்திகாவுக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இவர் தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடர்களில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திருமாங்கல்யம்

இதுவொரு முக்கோண காதல் கதை. நகரத்தில் காதலித்துவரும் நாயகன், கட்டாயத்தால் கிராமத்தில் வேறு பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு நாயகன் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் கதைக்கருவாகும்.  காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கின்றனர். இதில், மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ் என்பவர் தெலுங்கில் மூன்று தொடர்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் திங்கள் - வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

நிறைவடைந்த தொடர்கள்

இந்த ஆண்டு பாக்கியலட்சுமி, ஆனந்த ராகம், மாரி என பல நெடுந்தொடர்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதேபோன்று வீட்டுக்கு வீடு வாசப்படி, பனிவிழும் மலர் வனம் போன்ற தொடர்கள் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளன.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான தொடர்களில் பாக்கியலட்சுமியும் ஒன்று. விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி 1469 எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி தொடர் நிறைவு பெற்றது. இத்தொடரில் நாயகியாக கே.எஸ். சுசித்ராவும், ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்தனர். நாயகனாக சதீஷ் குமார் நடித்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி, துணை கதாபாத்திரங்களான நேஹா மேனன், விஜே விஷால், ரித்திகா தமிழ்ச்செல்வி, திவ்யா கணேஷ், ரஞ்சித், மீனா செல்லமுத்து, விகாஷ் சம்பத், ராஜலட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பும் பாக்கியலட்சுமி தொடருக்கு பக்க பலமாக அமைந்தது.

நினைத்தேன் வந்தாய்

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் நினைத்தேன் வந்தாய். இத்தொடரில் கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தனாவும் நடித்து வந்தனர்.  கதைப்படி கீர்த்தனா இறந்துவிட்ட நிலையில் அவரின் தங்கையான அபிராபி (சுடர்) கணேஷுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.  நினைத்தேன் வந்தாய் தொடர் 285 எபிசோடுகளுடன் ஓராண்டுக்குள் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதயம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதயம் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதயம் -2 ஒளிபரப்பாகி வருகிறது. இதயம் தொடரில் நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்தார். இவரின் வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடித்தார். 650 நாள்களுக்கு மேல் ஒளிபரப்பான இத்தொடரின், இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

ரஞ்சனி

சன் தொலைக்காட்சியில் ஆண் - பெண் நட்பை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடரில் நடிகை ஜீவிதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக சந்தோஷும் நடித்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி கிரிஷ், சுதர்சனம், சரத்குமார், சல்மான், ரஞ்சனி போன்ற துணைப் பாத்திரங்களின் நடிப்பும் தொடருக்கு நிலையான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இதனிடையே 5 நண்பர்களில் ஒருவரான சந்தோஷை, கரம் பிடிக்கும் சூழலைப் போராடி ரஞ்சனி வென்றதாக இத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது.  பகையை வெல்லும் பேராயுதம் அன்பு மட்டுமே என்பதையே கதையில் கருவாகக் கூற விரும்பியதால், குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

 நீ நான் காதல்

முழுக்க முழுக்க காதல் கதையாகவும், கணவன் மனைவி உறவை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த தொடர் நீ நான் காதல். விஜய் தொலைக்காட்சியில் நவ. 2023 முதல் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 384 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

புன்னகைப் பூவே

 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கப்பட்ட புன்னகைப் பூவே தொடர் 9 மாதங்களில்  319 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

நினைத்தாலே இனிக்கும்

ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். இனிப்பு வகைகளைச் சுட்டு விற்பனை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், இனிப்பு வகைகளைக் கொண்டு வணிகம் செய்யும் செல்வந்தர் வீட்டு மகனை திருமணம் செய்துகொள்கிறார். புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதை.

ஆஹா கல்யாணம்

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான தொடர் ஆஹா கல்யாணம். இத்தொடரில் நடிகை அக்‌ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடித்தனர். இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வந்தது.  கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பானது.

மீனாட்சி சுந்தரம்

பேரன், பேத்திகளெடுத்த வயதான முதியவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு இருவரும் தம்பதிகளாக சந்திக்கும் சம்பவங்களே மீனாட்சி சுந்தரம் தொடரின் கதைக்கருவாகும். இத்தொடரில் நாயகனாக எஸ்.வி. சேகரும், நாயகியாக நடிகை ஷோபனாவும் நடித்தனர். கலைஞர் தொலைக்காட்சியில் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களிடம் சேர்ந்த தொடராக மீனாட்சி சுந்தரம் மாறியது.

செவ்வந்தி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'செவ்வந்தி' தொடர், கணவனை இழந்த பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொடர், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நிறைவடைந்தது.

தங்கமகள்

இத்தொடரில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை அஸ்வினி நடித்தார்.

மேலும் இத்தொடரில் காயத்ரி ஜெயராம், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளம் நடித்திருந்தது. கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் 200 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் இந்த ஆண்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சன் தொலைக்காட்சியின் ராமாயணம் ஆகிய தொடர்களும் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. மற்றொரு முன்னணி தொலைக்காட்சியான, ஜீ தமிழில் மாரி, மனசெல்லாம், வள்ளியின் வேலன், மெளனம் பேசியதே, ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்கள் இந்த ஆண்டு சுபம் கண்டுள்ளன. மேலும், விஜய் தொலைக்காட்சியில் பொன்னி, பனி விழும் மலர் வனம், வீட்டுக்கு வீடு வாசப்படி ஆகிய தொடர்களும் இந்த ஆண்டுடன் முடிந்துள்ளன.

உள்ளபடி, இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட தொடர்களைக் காட்டிலும், முடிவுக்கு வந்த தொடர்களே அதிகம். முடிவுக்கு வந்த தொடர்களுக்கான இடங்களை நிரப்ப வரும் ஆண்டில் அடுத்தடுத்து புதிய தொடர்கள் ஒளிபரப்பாகும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

2025 year ender New serials end up some old serials

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரடைப்பு அபாயம்! காலையில் எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

விஜய் இல்லாமலும் வெற்றி பெறுவோம்: தமிழிசை

Arasan முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது! Vetrimaaran அப்டேட்!

ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் முதலிடம்..! 142-ஆவது இடத்தில் இந்தியா!

தில்லி கேபிடல்ஸின் கேப்டனாகிறாரா ஜெமிமா ரோட்ரிக்ஸ்?

SCROLL FOR NEXT