தலையங்கம்

இளவரசரின் இந்திய விஜயம்!

ஆசிரியர்

சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இளவரசர் சல்மானின் முதல் இந்திய விஜயம் இது என்பது மட்டுமல்லாமல், அவரது பாகிஸ்தான் விஜயத்தைத்  தொடர்ந்து நடைபெறும் விஜயம் என்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. புல்வாமா தாக்குதல் ஏற்கெனவே சவூதி அரேபியாவால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரது பாகிஸ்தான் அரசுமுறைப் பயணத்தில் அது குறித்து அழுத்தம் கொடுக்கப்படவில்லை. 
பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தானின் மொத்த அந்நிய செலாவணி இருப்பு 8 பில்லியன் டாலரைவிடக் குறைவு. கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை 12 முறை பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு ஆதரவு கோரியிருக்கும் பாகிஸ்தான், இப்போது 13-ஆவது முறையாக நிதி நெருக்கடிச் சிக்கலிலிருந்து மீள உலக நாடுகளிடம் உதவி கோருகிறது. சர்வதேச நிதியம் மிகவும் கடுமையான நிபந்தனைகளை விதிக்க முற்பட்டிருக்கிறது. 
இந்தப் பின்னணியில் சவூதி அரேபியா ஏற்கெனவே 6 பில்லியன் டாலர் கடனாகக் கொடுத்து பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்திருக்கிறது. சமீபத்திய பாகிஸ்தான் விஜயத்தின்போது 20 பில்லியன் டாலர் அளவில் பாகிஸ்தானுடன் ஒப்பந்தங்களில் இளவரசர் சல்மான் கையொப்பமிட்டிருக்கிறார். 
கடந்த நூற்றாண்டின் பனிப்போர் காலகட்டத்தில் சவூதி அரேபியா அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அணிசேரா நாடுகளில் முன்னிலை வகித்த இந்தியா அந்த நாட்டுடன் நெருக்கமாக இருக்கவில்லை. 1971 இந்திய - பாகிஸ்தான் போரும், 1973 கச்சா எண்ணெய் நெருக்கடியும், 1979 ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் தலையீடும் சவூதி அரேபியாவையும் பாகிஸ்தானையும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளச் செய்தன. அதேபோல, குவைத் மீதான இராக்கின் படையெடுப்பை இந்தியா வெளிப்படையாக எதிர்க்காதது, சதாம் உசேனுக்கு எதிரான சவூதி அரேபியாவைக் கோபப்படுத்தியது. 
 இந்தியாவில் பொருளாதார தாராள மயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இந்தியாவுக்கு மிக அதிகமாகக் கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக சவூதி அரேபியா மாறியது. அதேபோல, ஏறத்தாழ 30 லட்சம் இந்தியர்கள் சவூதி அரேபியாவில் பணியாற்றுகிறார்கள் என்பது இரண்டு நாடுகளின் நெருக்கத்தையும் அதிகரிக்க காரணமாக அமைந்தது. 
2006-இல் சவூதி அரேபிய அரசர் அப்துல்லாவின் இந்திய விஜயமும், 2010-இல் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ரியாத் விஜயமும் இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கத்தில் புதிய அத்தியாயங்கள் படைத்தன. 2016-இல் பிரதமர் நரேந்திர மோடியின் சவூதி அரேபிய அரசுமுறைப் பயணம் மிகப்பெரிய அளவில் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவையும் பொருளாதார நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம், ரத்தனகிரியில் 44 பில்லியன் டாலர் முதலீட்டில் சவூதி அரேபியாவின் ஆர்எம்கோ நிறுவனமும், அபுதாபி தேசிய பெட்ரோலிய நிறுவனமும் இணைந்து பிரமாண்டமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி விஜயத்தின்போது கையொப்பமானது. ஆனால், உள்ளூர் விவசாயிகளின் எதிர்ப்பால் இன்னும் அந்த ஆலைக்கான நிலம் கையகப்படுத்தல்கூட முன்னெடுத்துச் செல்லப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது. சவூதி இளவரசரின் அரசுமுறைப் பயணத்தில் இது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
இந்தியா எதிர்பார்ப்பதுபோல, இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதார ரீதியிலான நெருக்கம் அதிகரிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையேயான இந்தியாவின் போராட்டத்தில் துணை நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மிக முக்கியமான காரணம், சவூதி அரேபியாவின் எதிரி நாடுகளான இரான், கத்தார், இஸ்ரேல் ஆகியவற்றுடன் இந்தியா நெருக்கமாக இருக்கிறது என்பதுதான். 
மேலும், சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு முழுமையாக ஆதரவு தந்துவிட இயலாது. அவை இஸ்லாமிய நாடுகள் என்பது மட்டுமல்ல, பாகிஸ்தானிலுள்ள முக்கியமான குடும்பங்களுடன் அவர்களுக்கு நிலவும் சமூக நட்புறவும், குடும்ப ரீதியிலான உறவுகளும்தான் அதற்குக் காரணம். அதேபோல, ஆப்கானிஸ்தான் பிரச்னையிலும் சவூதி அரேபியாவால் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. 
இவையெல்லாம் இருந்தாலும்கூட, ராஜாங்க ரீதியிலான சில நிர்ப்பந்தங்களும், பொருளாதார அடிப்படையிலான உறவுகளும் இந்தியாவையும் சவூதி அரேபியாவையும் இணைக்கின்றன. 
வர்த்தக ரீதியாக பாகிஸ்தானைவிட இந்தியாதான் முக்கியம் என்பது சவூதி அரேபியாவுக்கு நன்றாகவே தெரியும். 
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலையால் தனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பதற்கு சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்த அரசுமுறைப் பயணங்கள் உதவும் என்பதால், பாகிஸ்தானைப் போலவே இந்தியாவுடனான நெருக்கத்தையும் வலுப்படுத்திக் கொள்வதில் அவர் முனைப்பு காட்டுவதில் வியப்பில்லை. இந்தியாவும் சவூதி அரேபியாவின் நிலைமையைப் புரிந்துகொண்டு வர்த்தகப் பொருளாதார நெருக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். 
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அரசுமுறைப் பயணமாக பயணித்த சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் விமானம், புது தில்லியிலிருந்து புறப்பட்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிப் பறந்தது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT