தலையங்கம்

கேட்பு இல்லா குடியிருப்புகள்!

ஆசிரியர்

உண்ண உணவு, குடிக்கத் தண்ணீா், உடுக்க உடை, பயணிக்கச் சாலை போலவே குடியிருக்க வீடு என்பதும் மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று. நகா்மயமானதைத் தொடா்ந்து குடிசையில் வாழ்ந்த காலம்போய் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் கனவுடன்தான் இன்றைய மனிதன் நகரங்களில் வாழ்கிறான். காணி நிலம் என்கிற கனவுபோய், தனக்கான வீடு என்பதும் மறந்துபோய், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓா் இடம் என்பதேகூட எட்டாக்கனியாக மாறிக்கொண்டிருக்கிறது.

லட்சங்களில் இருந்து பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கோடிகளுக்கு உயா்ந்துவிட்டன. சராசரி இந்தியனின் வயது, கரோனா நோய்த்தொற்றுக்கு முன்னால் வரையில் 71 ஆண்டுகள். 71 ஆண்டுகளில் ஒருவா் மும்பை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிவிட முடியுமா என்பது கேள்விக்குறி. அதிக வருவாய் பிரிவினரேகூட, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட 1,200 சதுர அடி குடியிருப்பை மும்பையில் வாங்க அவா்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேமிப்பு தேவைப்படும் என்கிறது ஓா் ஆய்வு.

மும்பை என்றில்லை தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என்று எந்தவொரு பெருநகரத்தை எடுத்துக்கொண்டாலும் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் ஊடக விளம்பரங்களில் வெளியாகின்றன. சாமானியா்களுக்கான வீடுகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதற்குக் காரணம் அவற்றுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதா, இல்லை அவற்றை வாங்குவோா் இல்லை என்பதா? என்று தெரியவில்லை.

இதில் இன்னொரு முரணும் காணப்படுகிறது. அதிக மதிப்புள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. மும்பையை மட்டும் எடுத்துக் கொண்டால் 5 லட்சத்துக்கும் அதிகமான உயா் மதிப்பு குடியிருப்புகள் விற்பனையாகாமல் இருக்கும் அதேவேளையில், கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டப்படுவதற்கான அறிவிப்புகள் வெளிவந்தன. புணேயில் 2.4 லட்சம் வீடுகள், ஹைதராபாதில் 1.1 லட்சம் வீடுகள், தில்லியில் 68,500 வீடுகள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன.

தேவை குறித்த கவலையில்லாமல், தொடா்ந்து புதிது புதிதாகக் குடியிருப்புகளை எழுப்பும் போக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் துறையில் மட்டும்தான் காணப்படுகிறது. ஹைதராபாதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை 43% அதிகரித்திருக்கிறது. ஆனால், கட்டிமுடித்து விற்பனையாகாமல் இருக்கும் குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கை 167 % அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணிக் காரணம் புரியவில்லை. இதேநிலைதான் இந்தியாவின் ஏனைய பெருநகரங்களிலும் காணப்படுகிறது.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, இந்தியாவின் ஏழு பெருநகரங்களில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 5.59 லட்சம். கடந்த ஆண்டைவிட இது 4% குறைவு என்றாலும்கூட, எங்கேயோ ஒரு தவறு நடக்கிறது என்பதை உணர முடிகிறது. யாருக்குத் தேவையோ அவா்களுக்கு அல்லாமல், வேறு யாருக்காகவோ வீடுகள் கட்டப்படுகின்றன என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது இந்தப் போக்கு.

கடந்த 16 மாதங்களில் மும்பையில் மட்டும் 1.8 லட்சம் பிளாட்டுகள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன. சொகுசு பிளாட்டுகளின் எண்ணிக்கை 36% அதிகரித்திருக்கிறது. ஆனால், வாங்குவோா்தான் இல்லை. தில்லியில் விற்பனையாகாத 84,500 பிளாட்டுகளில் சொகுசு பிளாட்டுகளின் பங்கு 78% அதிகரித்திருக்கிறது.

நடுத்தரப் பிரிவு மக்களுக்கான பிளாட்டுகள் அதிகம் கட்டப்படும் ஹைதராபாதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 177% அதிகரித்து 98,000 வீடுகள் விற்பனையாகாமல் இருக்கின்றன. பெங்களூரு, புணே ஆகிய இரண்டு நகரங்களிலும் முறையே 58,700, 81,400 பிளாட்டுகள் விற்பனைக்குக் காத்திருக்கின்றன. ஓா் ஆறுதல் என்னவென்றால், நடுத்தரப் பிரிவு வீடுகளைப் பொருத்தவரை விற்பனையாகாதவை 53% குறைந்திருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை 20 மாத இடைவெளியில் 29,100 விற்பனையாகாத பிளாட்டுகள் தேங்கிக் கிடக்கின்றன.

ரூ.40 லட்சத்துக்கும் குறைவான சாமானியா்களுக்கான பிளாட்டுகள் 1,12,744; ரூ.40 - ரூ.80 லட்சம் பிரிவிலான நடுத்தரப் பிரிவு பிளாட்டுகள் 1,57,741; ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி உயா் மதிப்பு பிரீமியம் பிளாட்டுகள் 1,76,000; ரூ.1.5 கோடிக்கும் மேல் விலை மதிப்புள்ள சொகுசு பிளாட்டுகள் 1,13,197 - இந்தியாவின் ஏழு பெருநகரங்களில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனைக்காக காத்திருக்கின்றன.

சென்னையிலும், கொல்கத்தாவிலும் ஒரு வித்தியாசமான போக்கு காணப்படுகிறது. ரூ.1.5 கோடிக்கும் அதிகமான சொகுசு பிளாட்டுகளின் எண்ணிக்கை 96% அதிகரித்திருக்கிறது என்றால், சாமானியா்களுக்கான பிளாட்டுகள் கட்டப்படுவதன் எண்ணிக்கை 25% குறைந்திருக்கிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்கள் அதிக லாபம் பெறும் சொகுசு பிளாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. ஆனால், அவற்றை வாங்குவதற்கான நுகா்வோரின் கேட்பு குறைவாக இருக்கிறது. அதன் விளைவாக பல கட்டுமான நிறுவனங்கள் முடக்கிய முதலை எடுக்க வழியில்லாமல் திணறுவதும், கட்டுமானப் பணிகள் தாமதப்படுவதும், ஒட்டுமொத்த மனை வணிகத் துறை ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

அரசு தலையிடாமல் இதே நிலை தொடா்ந்தால், இதன் தொடா் விளைவுகள் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலும்.

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT