செப்டம்பரில் முடிந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான வளர்ச்சி விகிதங்கள் ஆறுதல் அளிக்கின்றன. 2025-26 நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சியான 7.8% -ஐ விட, இரண்டாவது காலாண்டில் சற்று வளர்ச்சி கண்டு 8.2% என்று அதிகரித்திருப்பது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றம். பொருளாதாரத் தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் அக்டோபர் மாத வர்த்தகப் பற்றாக்குறையான 41.68 பில்லியன் டாலருக்கு நடுவிலும் நமது ஜிடிபி முன்னேற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி, இரண்டாவது காலாண்டுக்கான வளர்ச்சி 7% என்று கணித்திருந்தது. முதலாவது காலாண்டில் (ஏப்ரல்- ஜூன்) 8% எனும் நிலையில், நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7% என்பதைக் கடப்பதற்கான சாத்தியம் இப்போது தெரிகிறது. உலகின் ஏனைய பல நாடுகள் எதிர்மறை வளர்ச்சியை, அதாவது 0%-க்கும் குறைவான வளர்ச்சியைக் காணும்போது, இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி காண்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று.
வேளாண் துறை, முதலாவது காலாண்டில் ஆரோக்கியமான 3.5% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நல்ல பருவமழைப் பொழிவு காணப்பட்டிருப்பதால், இரண்டாவது காலாண்டில் அதைவிட அதிகமாக அல்லது அதே அளவிலான வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். நிதி, மனை வணிகம், மேலாண்மைத் துறைகளின் காரணமாக சேவைத் துறையும் வளமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
இந்தியாவின் உற்பத்தித் துறை 9.4% வளர்ச்சியையும், சேவைத் துறை 9.2% வளர்ச்சியையும் இரண்டாவது காலாண்டில் அடைந்திருப்பதற்குத் தனி நபர் நுகர்வு கணிசமாக அதிகரித்திருப்பது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். தனி நபர் நுகர்வு 9.1% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் அதன் அளவு 6.4% என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சர்வதேசச் சூழலுக்கு இடையிலும் உள்நாட்டுப் பொருளாதார இயக்கம் விறுவிறுப்பு அடைந்திருப்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரம் உணர்த்துகிறது. அதற்கு முக்கியமான காரணம், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிப்பை மேற்கொள்ளும் நிலையில், உள்நாட்டுப் பொருளாதார இயக்கம் பாதித்து விடாமல் இருப்பதற்காக நிதியமைச்சகம் மேற்கொண்ட முடிவுகள் எதிர்பார்த்தது போலவே கைகொடுத்திருப்பது தெரிகிறது.
அதேநேரத்தில், நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய மாதத்தின் ரூ.1.96 லட்சம் கோடியில் இருந்து ரூ.1.74 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு வரி வசூலுடன் ஒப்பிடும்போது 0.7% குறைந்திருக்கிறது என்பதுடன், கரோனா கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவுஎன்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பைப் பெரும்பாலும் 5%, 18% என்று இரண்டு வரம்புக்குள் சுருக்க முற்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார இயக்கம் அதிகரித்தாலும், வரி வசூல் அளவு முதலில் சற்று குறைவது எதிர்பார்க்கப்பட்டதுதான். மூன்றாவது காலாண்டில், ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்தின் முழுத் தாக்கத்தையும் எதிர்பார்க்கலாம். தனிநபர் நுகர்வும், மோட்டார் வாகனங்கள்-மின்னணுச் சாதனங்களின் அதிகரித்த விற்பனையும், வரி இழப்பை ஈடுகட்டும் என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு.
பரோடா வங்கியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 1,221 நிறுவனங்களின் மொத்த பற்று வரவு, இரண்டாவது காலாண்டில் 6.3% அதிகரித்திருப்பதாகவும், அதன்மூலம் ஈட்டப்பட்டிருக்கும் நிகர லாபம் 15.5% என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2025-26 நிதிநிலை அறிக்கை 10.1% வளர்ச்சியை எதிர்பார்த்தது என்றால், முதல் அரையாண்டின் வளர்ச்சி
8.8% தான் எனும்போது அதன் தாக்கம் வரிகள், கடன், பற்றாக்குறை உள்ளிட்டவற்றில் காணப்படும் என்பதை மறுத்துவிட இயலாது.
ஆரம்பத்தில் ஜிஎஸ்டி குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்கள் இப்போது பெருமளவில் குறைந்துவிட்டன. வர்த்தக வரவு-செலவு கணக்கு முறையில் ஜிஎஸ்டி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண மளிகைக் கடையில்கூட கணினி சார்ந்த கணக்கு முறையும், விற்பனைச் சீட்டு (பில்) வழங்குவதும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, வர்த்தகம் சர்வதேச நடைமுறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
2017-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையுடன் ஒப்பிடும்போது, இப்போது வரி வசூல் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி வசூல் 9.4% அதிகரித்து ரூ.20.08 லட்சம் கோடியை எட்டியது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2017-இல் 65 லட்சம் என்றால், இப்போது 1.51 கோடிக்கும் அதிகம். அதிகரித்த ஜிஎஸ்டி வரி வசூல் என்பது பொருளாதாரத்தின் அளவுகோல் மட்டுமல்ல, அரசின் வளர்ச்சித் திட்டங்களின் மூலதனச் செலவுக்கான அடிப்படையும்கூட. அரசின் வரி வரம்பில் வராமல் வர்த்தகம் இருக்கும்போது, கணக்கில் காட்டப்படாத வருவாயின் அளவு அதிகரிக்கிறது. அதன் விளைவாக, கணக்கில் வராத இன்னொரு பொருளாதார இயக்கம் நடைபெறுகிறது. விலைவாசிகள் அதிகரிக்கின்றன; அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது.
புகையிலை, பான் மசாலாவுக்கு அதிக அளவு வரி விதிப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல "ஜங்க் ஃபுட்' என்று அழைக்கப்படும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும், தவறில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.