தற்கொலை சித்திரிப்பு
தலையங்கம்

வழிதான் காட்ட முடியும்...

கடந்த 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்

உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான வழக்கில் ஒன்பது வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கி இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2023-இல் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 8.1 சதவீதம் பேர் (13,892) மாணவர்கள் ஆவர்.

கடந்த 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 65 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-இல் 8,423 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அது 2023-இல் 13,892-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், 2022-ஆம் ஆண்டிலும் 13,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 2018 முதல் 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஐஐடி-யில் 33 பேரும், என்ஐடி-யில் 24 பேரும், ஐஐஎம்-இல் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் ஐஐடி-யில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தப் போக்கு அதிகரித்துவரும் நிலையில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் அடங்கிய தேசிய பணிக் குழுவை (நேஷனல் டாஸ்க் ஃபோர்ஸ்) உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவினர் நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, 2035-க்குள் உயர் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத மாணவர் சேர்க்கை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேவையான எண்ணிக்கையில், தகுதியான பேராசிரியர்கள் நியமனம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் அதிக மாணவர்களைச் சேர்ப்பதால் கல்வித் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

வருகைப் பதிவு தொடர்பான கடுமையான விதிமுறைகள், முறையாகத் திட்டமிடப்படாத - அதிக சுமையை ஏற்படுத்தக் கூடிய பாடத் திட்டம், தேர்வு மதிப்பீட்டு முறை, பேராசிரியர்கள் பற்றாக்குறை, வெளிப்படைத்தன்மை இல்லாத வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவை தங்களை மன ரீதியாக பாதிப்பதாக அந்தக் குழுவினரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 65 சதவீத உயர் கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர்கள் இல்லை என்பதை அந்தக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 வழங்கி உள்ள சிறப்பு அதிகாரத்தின்படி ஒன்பது வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, அரங்க மகாதேவன் அடங்கிய அமர்வு வழங்கி உள்ளது.

அதிக எண்ணிக்கையிலானோர் பயனடையும் வகையில் கல்வியைப் பரவலாக்குதல், தனியார்மயம் போன்றவை காரணமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறினாலும் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் இறப்பு, மன அழுத்தம் போன்றவையும் அதிகரித்துள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு இப்போதே 50 சதவீத இலக்கை எட்டி இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இருப்பினும், ஆளுநர் - மாநில அரசு மோதலால் தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிதி நெருக்கடி அல்லது வேறு காரணங்களால் பல்கலைக்கழகங்களில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம் மட்டுமே பேராசிரியர்கள் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள நிலை இதுதான்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் நான்கு மாதங்களுக்குள் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும், பொதுவாகவே துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பணியிடங்கள் காலியான ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படுவது நடைமுறையாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித் தொகையை நான்கு மாதங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக, அவை தனிப்பட்ட காரணங்களுக்கானது, விதிவிலக்கானது என கல்வி நிறுவனங்கள் கூறுவதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

உண்டு உறைவிட உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தரமான மருத்துவ உதவி 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் திறன் மிகுந்த மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புற்றீசல்போல கல்வி நிறுவனங்களை மட்டும் உருவாக்குவது எதிர்பார்த்த பலன்களைத் தராது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள நிலையில், ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. படித்து முடிப்பவர்களுக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.

இதுபோன்றதொரு நிலை நாடு முழுவதும் ஏற்படக் கூடாது. அதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. எல்லா வழிகாட்டுதல்களையும் உடனடியாகப் பூர்த்தி செய்வது கடினமானது என்றாலும், மத்திய, மாநில அரசுகள் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் 'விக்சித் பாரத்' (வளர்ந்த பாரதம்) என்ற இலக்கு சாத்தியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம்! 7 பேர் பலி

மேட்டூர் அணை நிலவரம்!

விஜய்யின் ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: இன்று தீர்ப்பு!

SCROLL FOR NEXT