முகப்பு
இந்தியா

வங்கி கணக்கை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!

கருப்புப்பணத்தை முறைகேடாக டெபாசிட் செய்ய பொதுமக்கள் யாரும் தங்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Updated On : 18 நவம்பர், 2016 at 7:03 PM
பகிர்:

கருப்புப்பணத்தை யாரும்  முறைகேடாக டெபாசிட் செய்ய தங்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்தால், பொதுமக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடெங்கும் புழக்கத்தில் உள்ள கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதமாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை  செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். எனவே பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அப்பாவி பொதுமக்களின் வங்கி கணக்குகளில் அவற்றை சேமித்து புதிய நோட்டுகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக தற்பொழுது புகார் எழுந்து உள்ளது. இதெற்கென பணம் கமிஷனாக வழங்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு வெடித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் பொதுமக்கள் யாரும் தங்களுடைய வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்த அனுமதிக்கவேண்டாம்; அபப்டியான செயல்களில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கையை எதிர்க்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதம மந்திரியின் 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இத்தகைய மோசடி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைவினைஞர்கள், தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் வங்கிகளில் 2.5 லட்சத்திற்கு குறைவாக பயன்படுத்தினால் வருமான வரித்துறையிடம் எதுவும் தெரிவிக்கப்படாது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது, இதனை கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

ஒருவரின் வங்கி கணக்கில், அவர் டெபாசிட் செய்யாமல் வேறு யாராவது டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தால், இது வரிஏய்ப்பு நடவடிக்கையாக கருதப்பட்டு, வருமான வரிக்கு உட்பட்டது என்று தீர்மானிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இத்தகைய செயல்களை  அனுமதித்தவர்களும் வருமான வரி சட்ட பிரிவின் கீழ் வரிஏய்ப்புக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று மத்திய நிதி அமைச்சகம் விடுத்த செய்திக்குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.