முதலில் உங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்யுங்கள்: ஐ.நா. சபை உரையில் பாக்.,குக்கு சுஷ்மா பதிலடி!
காஷ்மீரில் மனிதஉரிமை மீறல்கள் நடக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்...
காஷ்மீரில் மனிதஉரிமை மீறல்கள் நடக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை உரையில் மத்திய வெளியுறவுக்குத் துறை அமைச்சர் சுஷ்மா பேசினார்.
இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் நியூயார் வந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்னால் இதே சபை கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்தியா மீது முன் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சுஷ்மா பேசியதாவது:
ஐ.நா.வால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக உலாவும் நாடுகளும் நமக்கு மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நாட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து தீவிரவாததிற்கு ஆதரவு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வளர்ச் செய்து பின்னர் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் இத்தகைய நாடுகளை நாம் அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
மனித உரிமை மீறல்கள் பற்றி பிற நாடுகளை குற்றம் சுமத்துபவர்கள், முதலில் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பலுசிஸ்தான் உட்பட சொந்த நாட்டிலேயே மோசமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் பலிக்காது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பாகம்.தீவிரவாத தாக்குதல்கள் மூலம் காஷ்மீரை அடைந்து விடலாம் என திட்டமிட்டால், அது ஒருபோதும் வெற்றி பெறாது.
முன் நிபந்தனைகள் விதித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததாக இந்தியா மீது இந்த சபையில் குற்றம்சாட்டப்பட்டது. அது என்ன முன் நிபந்தனை? இந்தியா விதித்தா? எங்கள் அரசு பதவியேற்கும் விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது விதிக்கப்பட்டதா? பிரதமர் நரேந்திர மோடி காபூலில் இருந்து லாகூர் சென்றபோது விதித்தாரா?
இந்தியா மீது தொடர் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அதற்கு பின்னரும் பாகிஸ்தானுடன் நட்பு ரீதியில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன் வந்ததே தவிர, எந்த நிபந்தனையம் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
சுஷிமாவின் இந்த உரையினை பாராட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். தன்னுடைய ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘ஐ.நா. பொது சபையில் சர்வதேச பிரச்சினைகள் குறித்து தீர்க்கமாக உரையாற்றிய சுஷ்மா ஸ்வராஜுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்