அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி அருகே மசூதி: ஷியா வக்ஃப் வாரியம் யோசனை
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து 'நியாயமான' தொலைவில் மசூதி அமைக்கலாம் என்று ஷியா பிரிவு வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து 'நியாயமான' தொலைவில் மசூதி அமைக்கலாம் என்று ஷியா பிரிவு வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
அயோத்தி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி அமைக்கக் கூடாது என்று ஹிந்து அமைப்புகளின் நிலைப்பாட்டை ஒரு முஸ்லிம் அமைப்பும் எடுத்துள்ளது இதுவே முதல் முறை என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமர் பிறந்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்குக் கோயில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஹிந்து அமைப்புகள், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்கு 'சற்று' தொலைவில் முஸ்லிம்களுக்கான மசூதியை அமைத்துக்கொள்ளலாம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை வரும் வெள்ளிக்கிழமை முதல் விசாரிக்க, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விசாரணைக்கு முன்னதாக ஷியா பிரிவு வக்ஃப் வாரியத்தின் சார்பில், அதன் தலைவர் சையது வாசீம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ள 30 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அயோத்தி பிரச்னைக்கும், சன்னி பிரிவு வக்ஃப் வாரியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்த வாரியம் மாற்று மதத்தினருடன் இணக்கமாக வாழ்வதில் நம்பிக்கையற்ற, மத வெறி பிடித்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இடிக்கப்பட்ட பாபர் மசூதி ஷியா வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது. எனவே, இந்த விகாரத்தில் சுமுகத் தீர்வு காண்பதற்கு ஷியா வக்ஃப் வாரியத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அமைப்பதற்கு ஷியா வக்ஃப் வாரியத்துக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
அயோத்தி பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்காக மசூதியோ, கோயிலோ கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள். ஆனால், மசூதியும், கோயிலும் அருகருகே அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இரு வழிபாட்டுத் தலங்களுமே ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்தும் என்பதால், ஒருவரது வழிபாட்டை மற்றொருவர் குலைத்து, அதனால் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த பகுதியிலிருந்து 'நியாயமான' தொலைவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.