இந்தியா

ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல

DIN

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
ஆர்ஜேடியின் 21-ஆவது நிறுவன நாள் விழா, பிகார் தலைநகர் பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று லாலு பிரசாத் பேசியதாவது:
ராம்நாத் கோவிந்த், கோலி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சமூகத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கோலி சமூகத்தினர் குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) கீழ் வருபவர்கள். எனவே, தலித் சமூகத்தவர் எனக் கூறப்படும் ராம்நாத் கோவிந்த், ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், பிகாரின் மகள். அவரை வெற்றி பெறச் செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பாட்னாவில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறேன்.
அதில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஒன்றிணைக்க முயற்சி: சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறேன். இந்த இரண்டு கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வந்தால், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோல்வி அடையச் செய்ய முடியும் என்றார் லாலு.
இதனிடையே, எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு ராம்நாத் கோவிந்தை ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாரின் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற காங்கிரஸ் இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT