முகப்பு
இந்தியா

வங்கிகளில் ஆதார் மையங்கள் தொடங்க திட்டம்

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஆதார் அட்டை வழங்கும் மையங்களைத் தொடங்க வேண்டுமென்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஆதார் அட்டை வழங்கும் மையங்களைத் தொடங்க வேண்டுமென்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:
ஆதார் அட்டை வழங்குவதற்காக இப்போது நாடு முழுவதும் 25,000 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அனைத்துமே தங்களுக்கென்று தனி இடத்தில்தான் இயங்கி வருகின்றன. வங்கி வளாகத்துக்குள் எந்த மையமும் செயல்படவில்லை.
எனவே, அனைத்து பொதுத் துறை, தனியார் வங்கிகளுக்கு இது தொடர்பாக நாங்கள் ஒரு கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்படி, வங்கிக் கிளைகளில் ஆதார் அட்டை வழங்கும் மையத்தை அமைக்குமாறு கூறியுள்ளோம். இந்த மையங்கள் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது மட்டுமின்றி, ஏற்கெனவே பெறப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தங்கள் இருந்தால் அந்தப் பணிகளையும் மேற்கொள்ள உதவும்.
நாட்டில் சுமார் 1,20,000 வங்கிக் கிளைகள் உள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இவற்றில் 10-ல் ஒரு வங்கிக் கிளையில் அதாவது 12 ஆயிரம் வங்கிக் கிளைகளில் ஆதார் மையங்களை தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளோம். புதிதாகக் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமன்றி, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குகளுக்கும் ஆதார் எண்ணை இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது.
இந்நிலையில், வங்கிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும், வங்கிக் கிளைகளில் ஆதார் மையங்கள் செயல்படுவதும் மிகவும் பாதுகாப்பானது. ஆதார் அட்டை வழங்க பணம் பெறுவது உள்ளிட்ட தவறுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
மேலும், பல தனியார் வங்கிகள் ஆதார் அட்டை வழங்கும் பணியை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →