முகப்பு
இந்தியா

14 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் தமிழகம் உள்பட 14 இடங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

நாட்டில் தமிழகம் உள்பட 14 இடங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம்:
2015-16-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் ஓரிடம் உள்பட 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைஅமைப்பது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதி வாய்ந்த மூன்று அல்லது நான்கு இடங்களைத் தேர்வு செய்யும்படி தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதுதொடர்பாக தமிழக அரசிடமிருந்து 4.5.2017-ஆம் தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக கூடுதல் விவரங்களை அளிக்க கடந்த மே 24 ஆம் தேதி தமிழகத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
அதற்கு தமிழக அரசிடமிருந்து கடந்த 12 ஆம் தேதி கடிதம் பெறப்பட்டது. தமிழகஅரசு அளித்துள்ள தகவலின் அடிப்படையில் இடம் தேர்வு செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் பிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இத்திட்டத்தின் தமிழகத்தில் மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில்உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. நாட்டில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் புதிதாக மொத்தம் 14 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →