முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு பயங்கரவாதி சலாஹுதீன் பகிரங்க மிரட்டல்: மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது சலாஹுதீன் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

இந்தியாவுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது சலாஹுதீன் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் பேசியதாவது:
இந்தியா மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சையது சலாஹுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. இது, அந்த இயக்கத்துக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி, ஆயுத உதவி கிடைக்கப்பெறுவதை முற்றிலுமாகத் தடுக்கும்.
இந்நிலையில், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு சலாஹுதீன் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதாவது, இந்தியாவின் எந்தப் பகுதியின் மீதும் எந்நேரமும் தாக்குதல் நடத்தும் திறன் தமது இயக்கத்துக்கு இருப்பதாக சலாஹுதீன் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.
மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்துக்கு மற்ற நாடுகளிலிருந்து வரும் உதவிகள் குறைந்துள்ள போதிலும், பாகிஸ்தானிடமிருந்து அந்த இயக்கத்துக்கு தொடர்ந்து நிதி மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்து வருகின்றன என்றார் அவர்.
அதிகரிக்கும் சமூக வலைதளப் பயன்பாடு: பயங்கரவாதிகளின் மத்தியில் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதில்: பயங்கரவாதிகள் அண்மைக்காலமாக மின்னணு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிநவீன செல்லிடப்பேசிகள், கணினிகள் மட்டுமன்றி சமூக வலைதளங்களையும் பயங்கரவாதிகள் தங்களின் சதித் திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →