உலகத் தரத்திலான பேருந்து நிலையங்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி: மத்திய அரசு
உலகத் தரத்திலான பேருந்து நிலையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகத் தரத்திலான பேருந்து நிலையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் "பிரவாஸ்' அமைப்பின் சார்பில் புதிய பேருந்து, சுற்றுலா வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்பட்டன. இதன் தொடக்க விழா, நவி மும்பை அருகே நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களில், மாநில அரசுகள் மூலம் உலகத் தரத்திலான பேருந்து நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,000 கோடி நிதியை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்பும் மாநில அரசுகளுக்கு, அதுகுறித்து மத்திய அரசிடம் தங்களது விருப்பதை தெரிவிக்கலாம். அப்பணி தொடர்பான ஆய்வுக்கு நிதி அளிக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது.
டீசல் மூலம் பேருந்துகள் இயக்கப்படுவது, நமது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. எனவே, டீசல் என்ஜினை தயாரிப்போருக்கு விரைவில் அதிக கெடுபிடிகளை கொண்டு வரவுள்ளேன். நல்ல காரியத்துக்கு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஆனால், அந்த நல்ல காரியத்துக்கு ஏதுவாக உங்களை மாற்ற விரும்பவில்லையெனில், நான் கட்டாயப்படுத்தி உங்களை மாற்றுவேன்.
பசுமை ரீதியான போக்குவரத்துக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். பேருந்து உரிமையாளர்கள் டீசலுக்குப் பதிலாக, எத்தனால், பயோ}டீசல் அல்லது பேட்டரிகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதன்மூலம், எரிபொருள் செலவு 25 சதவீதம் மிச்சப்படுவதால், பயணிகள் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 400 பேருந்துகள், திடவ மற்றும் திரவ கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் பயோ கியாஸ் மூலம் இயக்கப்படுகின்றன. அவர்களால் அந்த வழிகளில் பேருந்துகளை இயக்க முடியும்போது, நம்மால் அதைச் செய்ய முடியாதா? நமது நாட்டில் போதிய கழிவுகள் இல்லையா? என்று கேள்வியெழுப்பினார் நிதின் கட்கரி.
பைக்}டாக்ஸிகள்: இதனிடையே, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியபோது, பைக்}டாக்ஸி இயக்கத்தை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மோட்டார் சைக்கிள்களை டாக்ஸிக்களாக பயன்படுத்தும் வசதியை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான செயலியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்திருக்கிறோம்' என்றார்.