முகப்பு
இந்தியா

ஆதார் இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரிச் சட்டத்தின் ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:43 PM
பகிர்:

பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரிச் சட்டத்தின் ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஆதார் இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுக்களில் "ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் "பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, ஜூன் 9ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தனர். அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று கூறும் வருமான வரிச் சட்டத்தின் 139ஏஏ பிரிவு செல்லத்தக்கதுதான். இந்தப் பிரிவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
எனினும், ஆதார் திட்டமானது மனித கண்ணியத்தைப் பாதிப்பது தொடர்பான கவலைகள், இதில் அடங்கியுள்ள தனியுரிமைப் பிரச்னை ஆகிய விவகாரங்களை நாங்கள் இன்னும் பரிசீலிக்கவில்லை. அதை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும்.
ஆதார் திட்டத்தில் இருந்து தகவல்கள் கசியாமல் இருப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தத் தகவல்கள் கசியாது என்ற நம்பிக்கை குடிமக்களுக்கு ஏற்படும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
அதேசமயத்தில் வருமான வரிச் சட்டத்தில் உள்ள, தற்போது செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஷரத்துகளுக்கும், ஆதார் சட்டத்துக்கும் இடையே எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆதார் திட்டத்தில் உள்ள தனியுரிமைப் பிரச்னை தொடர்பாக அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும் வரை ஆதார் எண் இல்லாத பான் அட்டைகள் செல்லாது என்று கருதப்படக் கூடாது.
அதேபோல், தற்போது ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் அவற்றை தங்கள் பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். எனினும், ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து இன்னும் கிடைக்கப் பெறாதவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும். அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் விதிவிலக்கு அளிக்க வேண்டும். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
காங்கிரஸ் வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments