நிறைவேறத் தயார் நிலையில் மத்திய அரசின் ரூ.60,000 கோடி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்
தனியார் நிறுவனங்களை பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ஈடுபடுத்தும் மத்திய அரசின் "கொள்கைக் கூட்டணி'த் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.60,000 கோடி செலவில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும்
தனியார் நிறுவனங்களை பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ஈடுபடுத்தும் மத்திய அரசின் "கொள்கைக் கூட்டணி'த் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.60,000 கோடி செலவில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணிகளை தொடங்க மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மத்திய அரசு கொண்டு வந்த "கொள்கைக் கூட்டணி'த் திட்டத்தின் கீழ், முதல் முறையாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.60,000 கோடி செலவில் ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க கடந்த மாதம் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பான ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் செயலாக்கப் பணிகள் தொடங்கப்படும்.
லார்சன் அண்டு டூப்ரோ, ரிலையன்ஸ் டிஃபன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டம் குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. நீர்முழ்கிக் கப்பல்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கவும், "கொள்கைக் கூட்டணி'த் திட்டத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் தளர்த்தும். திட்டம்-75 (1) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 6 நீர்முழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் "திட்டம்-75' என்ற பெயரில் மும்பையிலுள்ள அரசுக்குச் சொந்தமான மஸகான் கப்பல் கட்டு தளத்தில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.