ஜிஎஸ்டி-யை நிறைவேற்றாத மாநிலத்துக்கு இழப்பீட்டு நிதி கிடையாது: ஜேட்லி
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி இழப்பீட்டு நிதி அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இந்தியாஜிஎஸ்டி-யை நிறைவேற்றாத மாநிலத்துக்கு இழப்பீட்டு நிதி கிடையாது: ஜேட்லி
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி இழப்பீட்டு நிதி அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி இழப்பீட்டு நிதி அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
கேரளம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவை தங்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றவில்லை. எனினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதால் அந்த மாநிலத்துக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிகிறது.
இந்நிலையில், இது குறித்து தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் ஜேட்லி கூறியதாவது: ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றிவிட்டன. எனினும், அதனை நிறைவேற்றாத மாநிலங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும், நுகர்வோரும் இழப்பை எதிர்கொள்வார்கள். ஏனெனில், பொருள்கள் மீது இருமுறை வரி கட்ட வேண்டிய நிலை வர்த்தகர்களுக்கு ஏற்படும். அவர்கள் ஏற்கெனவே செலுத்திய வரியைத் திரும்பப் பெறவும் முடியாது.
இதனால், அந்த மாநிலத்தில் உள்ள நுகர்வோர், நாட்டின் மற்ற பகுதிகளை விட அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், ஜிஎஸ்டி-யை நிறைவேற்றிய மாநிலங்களுக்கு மட்டுமே வரி இழப்பீட்டை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு நிதி வழங்கும். மற்ற மாநிலங்களுக்கு இந்த இழப்பீட்டு நிதி கிடைக்காது.
ஜிஎஸ்டி-யின் தொடக்க நிலையில் சில சவால்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் ஜிஎஸ்டி-யால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயும் உயரும். ஜிஎஸ்டி ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்த வேண்டும் என்பது 6 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு. அந்த வரி விதிப்பு முறைக்கு தயாராகவில்லை என்று யாரும் கூறினால் அது ஏற்கக் கூடியதாக இருக்காது.
விவசாயக் கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், நிதிப் பொறுப்புணர்வு, பட்ஜெட் மேலாண்மைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே, விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றார் ஜேட்லி.