முகப்பு
இந்தியா

சிபிஐ மூலம் திரிணமூல் காங்கிரஸை பணிய வைக்க பாஜக முயற்சி

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொருவரையும் மிரட்டி வைத்திருப்பதற்கு பாஜக முயன்று வருகிறது. மக்கள் நலனுக்கு ஆதரவாகவும், பாஜகவின் கொள்கைகளை விமர்சித்து நாங்கள் பேசி வருவதால், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி எங்களை பாஜக அச்சுறுத்தி வருகிறது.
நாரதா விடியோ விவகாரத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் என 12 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. நான் உள்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் அவர்கள் (பாஜக) கைது செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எதிராகப் பேசுவதைத் தடுக்க முடியாது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அண்மையில் மேற்கு வங்கத்துக்கு வந்திருந்தார். மேற்கு வங்கத்தின் கலாசாரம், அறம் ஆகியவை குறித்து பாஜகவினர் நமக்கு கற்றுக் கொடுக்க முயலுகின்றனர்.
ஹிந்துயிஸம், பிறரை வெறுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும்தான் போதிக்கிறது.
நான் ஒரு ஹிந்து. நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துகிறேன். மதத்தின் பெயரால் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதை சகித்துக் கொள்ள முடியாது என்றார் மம்தா பானர்ஜி.

முழு கட்டுரையைப் படிக்க →