இந்தியா

தீபிகா படுகோனின் திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை: மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய உ.பி  அரசு! 

DIN

லக்னௌ: சித்தூர் ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவதி'  திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உத்தரப்பிரதேச அரசு கடிதம் எழுதியுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச அரசி 'ராணி பத்மினி'யின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற இந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படத்தில், இஸ்லாமிய அரசன் அலாவுதீன் கில்ஜி வேடசத்தில் நடிகர் ரண்வீர் சிங் நடித்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி,  ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரிசையாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படப்பிடிப்பின் பொழுதே இயக்குநர் தாக்கப்பட்டார். செட்டுகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் படம் வெளியாகும் நாளன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக 'கர்னி சேனா' என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக படத்தை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தற்பொழுது போராட்டங்கள் வலுத்து வருவதால் பத்மாவதி திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பத்மாவதி படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பத்மாவதி படத்துக்கு சான்றிதழ் அளிக்கும் முன் பொதுமக்களின் கருத்தையும், படம் குறித்து எழுந்துள்ள பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் படம் வெளியானால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பது சிரமமாக இருக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT