இந்தியா

26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை

26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் உதவிகளுக்காக கேரள அரசு ராணுவம் மற்றும் தென்னக கப்பல்படை உதவியை நாடியுள்ளது. 

ENS

26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் உதவிகளுக்காக கேரள அரசு ராணுவம் மற்றும் தென்னக கப்பல்படை உதவியை நாடியுள்ளது. 

கேரள இடுக்கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்ட எல்லையிலுள்ளது கேரள மாநிலத்தைச் சேர்ந்த இடுக்கி மாவட்டம். இங்குள்ள பெரியாற்றின் குறுக்கே செறுதோணி அருகே இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், 72 டி.எம்.சி. கொள்ளளவும், பெரியாற்றின் குறுக்கே 555 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம், கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரமாகும். இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் 780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கேரளத்தில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்குப் பருவமழை 192.3 செ.மீ. அளவு பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 49 சதவிகிதம் அதிகமாகும். இடுக்கி அணை மொத்த கொள்ளளவை எட்டிய நிலையில்,  26 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை பகல் 12:30 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டால், அரபிக் கடலில் கலக்கும் வரை இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டக் கரையோரங்களில் உள்ள 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் என்றும், எனவே பொதுமக்கள் பாதுகாப்பு முகாமுக்கு செல்லுமாறும் கேரள அரசு அறிவித்து, அதற்கேற்றவாறு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

பகல் நேரங்களில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு, இரவு நேரங்களில் மதகுகள் மூடப்படும் என்று அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம். மணி தெரிவித்துள்ளார்.

செறுதோணி பகுதியில் உள்ள 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. முதல் கட்டமாக, 40 செ.மீட்டர் அளவுக்கு மதகுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,750 கன அடி நீர் பெரியாற்றில் வெளியேற்றப்படும். அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது, ஆல்வா பகுதிதான் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

எனவே, ஆல்வா பகுதியில் கடலோரக் காவல்படை படகுகள், விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்குத் தயாராக உள்ளன. மேலும், கேரள அரசு ராணுவத்தின் உதவியை கோரியதால், ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். அதுபோல தென்னக கப்பல்படை வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

எஸ்ஐஆர் பணி: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

SCROLL FOR NEXT