இந்தியா

காங்கிரஸுக்கு காந்தி, நேரு என்றால் பாஜகவுக்கு வாஜ்பாய் - மோடி, அமித்ஷாவின் அடுத்த நகர்வு

DIN

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தேசிய அடையாளமாக முன்நிறுத்த பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடுத்த 8 மாதங்களில் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் வரவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில் பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் காலமானார். 

பாஜக தொடக்கம் முதலே தங்களது கட்சியின் தேசிய அடையாளமாக மறைந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தீனதயாள் உபாத்யாய-வை முன்நிறுத்தி வந்தனர். ரயில் நிலையம், துறைமுகம், மத்திய அரசின் திட்டங்கள் என பலவற்றுக்கு தீனதயாள் உபாத்யாய-வின் பெயரை பாஜக சூட்டிவந்தது. 

ஆனால், தீனதயாள் உபாத்யாய கட்சிக்குள் மட்டுமே அடையாளமாக இருக்கிறார், பெரும்பாலான மக்களிடம் அவரை கொண்டு சேர்க்க முடியவில்லை என்ற பிரச்னை பாஜகவினருக்கு இருந்தது.

அதற்கு உதாரணமாக, மத்திய அரசின் மிகப் பெரிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தீனதயாள் உபாத்யாய் பிறந்த தினமான செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் அறிவித்தார். இதற்கு, அடுத்த 7 தினங்களில் காந்தி ஜெயந்தி வருகிறது. இருப்பினும், அவர்கள் தீனதயாள் உபாத்யாய் பிறந்த தினத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் கேள்விகள் கிளம்பின. இதற்கு முன்னதாகவும் பல்கலைகழகங்களுக்கு அவரது பெயரை சூட்டும் போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

அதனால், பாஜக தற்போது புதிய வியூகத்தை வகுத்து வருகிறது.  காங்கிரஸ் கட்சியினருக்கு எப்படி காந்தி, நேரு என்கிற ஒரு பெயர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறதோ அதற்கு நிகராக வாஜ்பாயை தேசிய அளவிலான அடையாளமாக முன்நிறுத்த அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 

"வாஜ்பாயை முன்னணி தேசிய அடையாளமாக முன்நிறுத்தும் பாஜகவுடைய பணி தற்போது தான் தொடங்கியுள்ளது. வாஜ்பாயின் அஸ்தியை நாட்டின் 100 நதிகளில் கரைப்பது அதற்கான தொடக்கம் தான். ரக்ஷா பந்தன் சமயத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி  மக்கள் மனதில் வாஜ்பாயை பதிய வைப்பதற்கு திட்டமிடவுள்ளனர். 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி-நேரு சகாப்தத்தால் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்து வருகின்றனர். 

கவிதை மட்டுமின்றி பல தலைப்புகளில் வாஜ்பாய் ஆற்றிய ஏராளமான உரைகள் எங்களிடம் உள்ளது. மத்தியிலும், 22 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் வரும் மாதங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகும். 

வாஜ்பாயின் எண்ணற்ற உரைகள் அவரை பாஜகவின் மிகப் பெரிய தூதராக முன்நிறுத்துவதை வரும் காலங்கள் உறுதிபடுத்தும்" என்றார்.    

அதனால், காந்தி-நேரு சகாப்தத்துக்கு இணையாக வாஜ்பாயை முன்நிறுத்துவது குறித்து திட்டமிட மோடியும், அமித்ஷாவும் விரைவில் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் 'நயா ராய்பூர்' என்ற நகரை 'அடல் நகர்' என மாற்றி பணிகளை தொடங்கிவிட்டார். மத்தியப் பிரதேச அரசும் வாஜ்பாயின் வாழ்கை வரலாறை பள்ளி பாடப்புத்தகத்தில் இணைக்கவுள்ளது. மேலும், வாஜ்பாயை நினைவுகூறும் வகையில், அவரது பெயரில் பல விருதுகளையும் அறிமுகப்படுத்தி, ஸ்மார்ட் சிட்டிகளுக்கு அவரது பெயரையும் சூட்டவுள்ளது. 

வரும் காலங்களில் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் திட்டங்கள், விருதுகள், நகரங்கள் போன்றவற்றின் பெயர்கள் வாஜ்பாய் பெயராக மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT