முகப்பு
இந்தியா

2 மணிநேரத்தில் உருவாகும் 'தெர்மாகோல் கழிவறை'

பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுக்கும் விதமாக புணேவைச் சேர்ந்தவர் 2 மணி நேரத்தில் தெர்மாகோல் பயன்படுத்தி கழிவறை அமைத்துத் தருகிறார்.

Updated On : 24 பிப்ரவரி, 2018 at 12:42 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM

பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுத்து தூய்மையை முன்னெடுக்கும் விதமாக புணேவைச் சேர்ந்த ஒருவர் தெர்மாகோல் கழிவறைகளை அமைத்துத் தருகிறார். இது பலதரப்பட்ட நபர்களிடம் இருந்து வரவேற்பை பெற்று வருகிறது.

புணேவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் மாணே, அப்பகுதியில் உள்ள சதாரா என்ற பின்தங்கிய மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இதனால் பகுதிநேர வேலை செய்து படித்து முடித்தார். கல்லூரி காலங்களில் நடைமேடைகளில் தங்கியும், உணவு விடுதிகளில் இரவுநேரத்தில் பணிபுரிந்தும் வந்துள்ளார்.

பின்னர் 1993-ம் ஆண்டு 'மாணே க்ரூப் ஆஃப் கம்பனீஸ்' என்ற தெர்மாகோல் உற்பத்தி இயந்திரங்கள் உருவாக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த இயந்திரங்களை மொத்தம் 45 நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் 80 சதவீத தெர்மாகோல் இவரது இயந்திரத்தால் உருவாக்கப்படுவதே ஆகும்.

Advertisement

2007-ஆம் ஆண்டு லிம்கா சாதனையிலும் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா, உருகுவே உள்ளிட்ட நாடுகள் இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் தெர்மாகோல் உற்பத்தி இயந்திரத்தின் காப்புரிமையும் பெற்றுள்ளார்.

தற்போது இவரது நிறுவனம் 70 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி வரை லாபம் ஈட்டுகிறது. பெரும்பாலான நாடுகள், பிற நிறுவனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருப்பதால் இவரது தயாரிப்புகளையே விரும்புகின்றன.

இந்நிலையில், பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தற்போது தெர்மாகோல் கொண்டு கழிவறைகளை உருவாக்கி வருகிறார். தெர்மாகோல் மற்றும் சிமெண்ட் ஆகிவற்றைக் கொண்டு 2 மணிநேரங்களில் இந்த கழிப்பறைகள் உருவாக்கப்படுகிறது.

மேலும் இவற்றை கழிப்பறை உருவாக்க முடியாத மணப்பெண்களுக்கு திருமணப் பரிசாகவும் வழங்கி வருகிறேன். அவ்வகையில் இதுவரை 25 மணப்பெண்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இவ்வகை கழிவறைகள் 22,000 வரை விநியோகிக்கப்பட்டுள்ளது என்று ராம்தாஸ் மாணே தெரிவித்தார்.

எந்த ஒரு லாப, நஷ்ட நோக்கங்கள் இன்றி உருவாக்கப்படும் இவ்வகை கழிவறைகளுக்காக இந்திய அரசாங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருதுகளும், அங்கீகாரங்களும் மாணேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் சிறந்த சுகாதார கட்டமைப்புக்கான சிஎஸ்ஆர் விருதும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வரும் நிலையில், இவரது இந்த புதுமையான முயற்சி தெர்மாகோல் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பாராட்டுதலுக்குரியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.