முகப்பு
இந்தியா

ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக பள்ளி மாணவி! 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவி ஒருத்தி கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2018 at 6:00 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:30 PM

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவிலுள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவி ஒருத்தி கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவின் த்ரிவேணி நகரில் அமைந்துள்ளது பிரைட்லாண்ட் பள்ளி. இப்பள்ளியில்தான் புதனன்று காலைஇந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஹ்ரித்திக். இன்று காலை பள்ளியில் பிரார்த்தனை முடிந்தவுடன், அதே பள்ளியில் பெரிய வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் ஹ்ரித்திக்கை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவனைக் கடுமையாகத் தாக்கிய அவர் பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து ஹ்ரித்திக்கை குத்தியுள்ளார்.

Advertisement

இந்த தாக்குதலில் கடுமையான ரத்த சேதம் அடைந்த ஹ்ரித்திக் அங்கேயே மயங்கி விழுந்து விட்டான். பின்னர் அவனைப் பார்த்த மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், அவன் உடனடியாக அருகில் இருந்த கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழக மருத்துவனையில் சேர்க்கப்பட்டான் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ரீனா மனஸ் தெரிவித்தார்.    

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த ஹ்ரித்திக் ஆண்கள் போல் தலைமுடியினை வெட்டியிருந்த மாணவி ஒருவர்தான் தன்னை அழைத்துச் சென்றார் என்றும், தன்னால் அவரை அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளான். ஹ்ரித்திக் தற்பொழுது தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறான்.  

பள்ளியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள குறிப்பிட்ட அந்த கழிப்பறையானது தற்பொழுது பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம் பள்ளியில் முழுமையாக சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட கழிப்பறையின் அருகே சிசிடிவி  இல்லாத காரணத்தால் மாணவியை கண்டுபிடிப்பது சிரமம் என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக ஹ்ரித்திக் உடல்நலம் தேறுவதற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.