முகப்பு
இந்தியா

வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 1:13 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM


புது தில்லி: உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 23ம் தேதி தாக்கல் செய்யுமாறு அடர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

Advertisement

முன்னதாக, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மே 3ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இன்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், ஏற்கனவே இந்த நடைமுறை பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடர்னி ஜெனரல் கூறியிருந்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்றும், இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு உதவும் என்றும் கூறினர்.

முன்னதாக, நாட்டில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் நடைபெறும் விசாரணைகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆடியோ மற்றும் விடியோ பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.