இந்தியா

ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸார் தடியடி: கேரளாவில் பதற்றம்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை முதல்முறையாக திறக்கப்படுகிறது. இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட திருவாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பந்தனம்திட்டாவில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பிரச்னைக்குத் தீர்வுகாண்பது குறித்து ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை தந்திரி, பந்தள ராஜ குடும்பத்தினர், ஐயப்ப சேவா சமாஜம் உள்ளிட்டோர் இடையே செவ்வாய்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. 

பக்தர்கள் எழுப்பும் கோரிக்கைகளை ஏற்க போர்டு தயாராக இல்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை என பந்தள ராஜா குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஆன்டோ அந்தோணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அதனை எதிர்த்து, அவசரச்சட்டத்தை இயற்றியது. பின்னர், நாடாளுமன்றத்தில் தனிச்சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோல், தற்போதும் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரள காங்கிரஸ் கட்சியினர் கேரள மாநிலம் நிலக்கல்லில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, இதுதொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT