புது தில்லி: எண்ணெய் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது என்ற விபரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மத்திய அரசு தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வெளிக் காரணங்ககளே காரணம் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது என்ற விபரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
எண்ணெய் நிறுவனங்கள் எந்த சூத்திரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது? இந்த விலை உயர்வு முடிவின் பின்னணியில் உள்ள பகுப்பாய்வு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலுமா? இந்த தினசரி விலை உயர்வின் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் முறைகேடாக லாபம் பெறுகிறதா?
எனவே இந்த தினசரி விலை உயர்வை கட்டுப்படுத்தி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புதனன்று இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது தில்லி உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.