இந்தியா

ராணுவத்தில் மதவாதம் கலக்கக் கூடாது: மன்மோகன் சிங்

DIN


ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2016-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் நினைவாக, வரும் 29-ஆம் தேதி துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள நிலையில், மேற்கண்ட கருத்தை மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஏ.பி.பரதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது:
சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில் மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருப்பது மதச்சார்பின்மையே. அதனை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பணி நீதித்துறைக்கு உள்ளது. இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின் கவனம் திரும்பிவிடக் கூடாது.
இதேபோல், தேர்தல் நடைமுறைகளில் மதம், மத உணர்வுகள், பாகுபாடுகள் உட்புகாமல் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
ராணுவத்தில்...: அரசியல், மதவாதம் கலப்பு இல்லாத மிகச் சிறப்பான வரலாறு, நமது ராணுவத்துக்கு இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்காமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். மதச்சார்பின்மை கட்டமைப்பு வலுவிழந்தால், வளர்ச்சி, ஜனநாயகம் என அனைத்து நிலைகளிலும் நாடு வலுவிழக்கும்.
மதச்சார்பின்மையை காப்பதில் நீதித் துறைக்கு இணையான பங்கு ஊடகங்களுக்கு உள்ளது. அதேபோல், நாட்டு மக்களுக்கு கல்வியளித்தல், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதும், மதச்சார்பின்மை மாண்புகளையும் நடைமுறைகளையும் காப்பதும் அரசியல் கட்சிகளின் பணியாகும் என்றார் மன்மோகன் சிங்.
மோடி அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ்: இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது:
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ் அமைப்புதான். மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு, தற்போது பிரிவினை, தாராளமயம், அரசியலமைப்பு விரோத கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியிலும், கொள்கைகள் ரீதியிலும் காங்கிரஸுடன் பல்வேறு வேறுபாடுகள் நிலவுகிறது. இருப்பினும், பாசிச சக்திகளுக்கு எதிராக போராடவும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை காக்கவும் இடதுசாரிகளுக்கு பொதுவான களம் தேவைப்படுகிறது. பாஜகவை எதிர்க்க இடதுசாரி கட்சிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றார் சுதாகர் ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT