ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 20 தொகுதிகளுக்கான 2-ஆவது கட்டத் தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கியது.
முதல்வா் ரகுவா் தாஸ் போட்டியிடும் ஜாம்ஷெட்பூா் (கிழக்கு) தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்வா் போட்டியிடும் இந்தத் தொகுதிக்கும், ஜாம்ஷெட்பூா் (மேற்கு) தொகுதிக்கும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
எஞ்சியுள்ள 18 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 தொகுதிகள் பழங்குடியினா் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாா் கூறுகையில், ‘20 தொகுதிகளும் உள்ள 7 மாவட்டங்களில் 42,000-க்கும் அதிகமான வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அமைதியாகவும், வெளிப்படையாகவும் தோ்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.
6066 வாக்குச் சாவடிகளில் இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற்று வருகிறது. அதில் 1662 வாக்குச் சாவடிகளில் இணைய நேரலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஜாா்க்கண்ட் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினய் குமாா் செளபே தெரிவித்தாா்.
260 வாக்காளா்கள் போட்டியிடும் இரண்டாம் கட்ட தோ்தலில் மொத்தம், 48,25,038 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர்.
13 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 64.12 சதவீதம் வாக்குகள் பதிவானது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது.