சபரிமலை தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம்போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம்போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.
தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக சபரிமலைக் கோயிலை நிர்வகிக்கும் தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இதுவரை தேவசம்போர்டு எதிர்த்து வந்தது.
இந்த நிலையில், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது சபரிமலை தேவசம்போர்டு.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு மேற்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சபரிமலை கோயிலில் பாலின அடிப்படையில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, அங்கு வழிபாடு நடத்த பெண்களுக்கு இருந்த தடையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீக்கியது.
இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டுமே பெண்களுக்கு எதிரான தடையை நீக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக சபரிமலை கோயில் அமைந்துள்ள கேரள மாநிலத்திலும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் சுமார் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதும் தீண்டாமையே என்று கேரள அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. காரசார வாதத்தின் இடையில், தீர்ப்பை ஏற்பதாக தேவசம்போர்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.