குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மணிப்பூரில் தடையை மீறி போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையுத்தரவு அமலில் இருந்த போதிலும் அதையும் மீறி தலைநகர் இம்பாலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையுத்தரவு அமலில் இருந்த போதிலும் அதையும் மீறி தலைநகர் இம்பாலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்பாலில் முக்கிய பிரமுகர்களின் இல்லங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள் தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் செல்லிடப்பேசிகளின் இணையதளச் சேவை துண்டிக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்தன.
இம்பால் நகரின் கைமஹை மற்றும் தாக்கல் லைகை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு சிலர் திடீரென மசோதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களால் தாக்குதலுக்குட்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சைப் பெறுபவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த தகவலை போலீஸார் தெரிவிக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களும் இயங்கவில்லை.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் செய்தி ஒளிபரப்ப மாவட்ட நீதிபதி நெளரம் பிரவீன் சிங் தடை விதித்திருந்தார். கடந்த திங்கள்கிழமை முதல் இம்பாலின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அது நாட்டு மக்களை பாதிக்காது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களும் இந்த மசோதாவை எதிர்ப்பதால் அங்கு ஒருவித பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.