முகப்பு
இந்தியா

மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது: சுட்டுரை நிறுவனத்துக்கு நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அமெரிக்காவில் எழுந்தது போன்ற புகார்கள், இந்தியாவில் எழாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:27 am IST
பகிர்:


வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அமெரிக்காவில் எழுந்தது போன்ற புகார்கள், இந்தியாவில் எழாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுட்டுரை (டுவிட்டர்) நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
சுட்டுரை சமூக வலைதளத்தில் பயனாளர்களின் தரவு பாதுகாப்பு, உரிமைகள் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்ஸி நேரில் ஆஜராகும்படி, தகவல்தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்கெனவே அழைப்பாணை (சம்மன்)  அனுப்பியிருந்தது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி அவர் ஆஜராகவில்லை. அந்த நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள்தான் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டு, 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக சுட்டுரை நிறுவனத்தின் பொதுக் கொள்கைக்கான துணைத் தலைவர் கோலின் க்ரோவெல் உள்ளிட்ட அதிகாரிகள், நா
ôளுமன்ற குழு முன் ஆஜராகினர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அமெரிக்காவில் எழுந்தது போன்ற புகார்கள், இந்தியாவில் எழாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுட்டுரை நிறுவன அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழுவினர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற குழுவின் தலைவர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், அரசியல் பாகுபாடு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முதன்மை அதிகாரியை நியமிக்க சுட்டுரை நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு சுட்டுரை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. நாங்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, அவர்கள் உரிய பதிலை அளித்தனர். மேலும் சில கேள்விகளுக்கு அடுத்த 10 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுட்டுரையைத் தொடர்ந்து, முகநூல் (ஃபேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) ஆகிய சமூக வலைதளங்களின் பொதுக் கொள்கைக்கான தலைவர்களையும் நேரில் அழைத்து விளக்கம் பெற முடிவு செய்துள்ளோம். அதன்படி, அடுத்த மாதம் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்றார் அனுராக் தாக்குர்.
இதனிடையே, முகநூல் நிறுவனத்தின் சர்வதேச பொதுக் கொள்கைக்கான துணைத் தலைவர் ஜோயல் கப்லான், நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் எதிர்மறையான கருத்துகளை ரஷிய அமைப்புகள் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.