சிஆர்பிஎஃப் வீரர்களின் புகைப்படங்களைக் காட்டி மோடி தேர்தல் பிரசாரம்
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடியின் பின்னணியில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்கள் அமைந்திருந்தன.
சுரு: ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடியின் பின்னணியில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்கள் அமைந்திருந்தன.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சுரு பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்நாள். நாடு மிகவும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இந்நாள் உறுதி செய்துள்ளது.
இந்தியாவுக்கு ஒரு சரிவு நிலை கூட ஏற்பட விட மாட்டேன் என்று உங்களுக்கு இங்கே வாக்கு அளிக்கிறேன். நாட்டை விட பெரியது இங்கே எதுவும் இல்லை என்று, இந்திய விமானப் படையினர், இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த சம்பவத்தை சூசகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
புல்வாமா தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மோடி, இன்று புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமரிசிக்க வாய்ப்பு உள்ளது என்றே கருதப்படுகிறது.