முகப்பு
இந்தியா

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமிக்க வேண்டியது அவசியம்: குடியரசுத் தலைவர் உரை

ஒவ்வொரு குடிமகனின் வாழ்வும் மேம்பட இந்த அரசு பாடுபடும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:18 AM
பகிர்:


புது தில்லி: ஒவ்வொரு குடிமகனின் வாழ்வும் மேம்பட இந்த அரசு பாடுபடும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

மேலும், எதிர்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

17வது மக்களவைக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கி உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் அவைத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணியாற்ற வேண்டும். இந்திய நாட்டில் வாக்களிக்க முன் வந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே போல முதல் தலைமுறை வாக்காளர்களும் ஏராளமானோர் வாக்களித்துள்ளனர்.

புதிதாக தேர்வாகி மக்களவைக்கு வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்ற திறனுடன் செயல்பட வேண்டும். மக்களின் வாழ்க்கை சிறப்பாக்குவதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கம்.

பல்வேறு துறைகளின் நிபுணர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சி தங்களுக்கானது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கியது என்பதை அடிப்படையாக வைத்து பணியாற்றும். நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க இந்த அரசு முழு வீச்சியல் பாடுபடும்.

தற்போது பதவியேற்றுள்ள பாதி எம்.பி.க்கள் புதிய முகங்கள். தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கியத் தீர்மானமாகும். எல்லையில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்தினரை பாதுகாப்போம்.  துணை ராணுவப் படையினரின் குடும்பங்கள் பயன் அடையும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

 ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள்.

நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் நலனும் மத்திய அரசுக்கு முக்கியம். தேசிய வளர்ச்சியின் நலன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். குடிநீர் பிரச்னை என்பது நாட்டு மக்கள் முன் தற்போது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் அவசியத்தை அறிந்தே, ஜல் சக்தி எனும் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →