தில்லியில் மனைவி, பச்சிளம் குழந்தை உட்பட 4 பேரை கழுத்தறுத்துக் கொன்றவர் கைது
தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை உட்பட 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை உட்பட 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட உபேந்தர் ஷுக்லா, தனியார் கல்வி மையம் நடத்தி வந்தவர். இவர் மன அழுத்த நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உபேந்தர் தனது மனைவி அர்ச்சனா, 2 மாதக் கைக்குழந்தையான மகள், 5 வயது மகன், 7 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக காவல்துறை உதவி ஆணையர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு அறைகள் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையில் அர்ச்சனாவின் தாய் இருந்துள்ளார். சனிக்கிழமை காலை வெகுநேரம் ஆகியும், மகளும் குடும்பத்தினரும் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அறைக் கதவு திறக்கப்பட்டது. அப்போது அங்கே கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு அருகே உபேந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அறையில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொலை செய்ததாக உபேந்தர் கைப்பட கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஆனால், கொலைக்கானக் காரணத்தைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
முதற்கட்ட விசாரணையில் கொலை நள்ளிரவு 1 மணி முதல் 1.30 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.