முகப்பு
இந்தியா

நகராட்சி ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:21 AM
பகிர்:

போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க நகராட்சி  சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு ம.பி மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், இந்தூர்-3 தொகுதி எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். அவர் இடிக்கும் பணியில் இருந்த அதிகாரிகளிடம் பணியை நிறுத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியைத் தடுத்தார்.

இதன்காரணமாக நகராட்சி அதிகாரிகளுக்கும்  ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதன்காரணமாக கோபமடைந்த ஆகாஷ், நகராட்சி அதிகாரி ஒருவரை அங்கிருந்த அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் பேட்டால் தாக்கினார். அத்துடன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூடியிருந்த சக அதிகாரிகளையும்  தாக்கினர். போலீசார் தடுக்க முயன்ற போதும் ஆகாஷ் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது, பொதுப் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து ஆகாஷ் விஜய்வர்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.