இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கு: ப. சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீட்டிப்பு

DIN

புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி நீதிமன்றம் மீண்டும் நீட்டித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை வழங்கினார். இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன தனித்தனியே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ அமைப்பால் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், அவர்கள் இருவரின் பெயர்களும் இருந்தது. 

இதையடுத்து முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது. பிறகு இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு பிப்ரவரி 18-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில், கார்த்தி சிதம்பரத்தை மார்ச் மாதம் 5,6,7,12 ஆகிய நாள்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது; உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமலாக்கத் துறை முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜராகி வருகிறார். ஆதலால் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ப. சிதம்பரம், விசாரணையை ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், விசாரணையை ஒத்திவைப்பதால், வழக்கு மேலும் காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. முன்ஜாமீன் மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இருப்பினும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி. சைனி, வழக்கு மீதான விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக குறிப்பிட்டார். அப்போது  ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி ஆகியோர் குறுக்கிட்டு, ப. சிதம்பரம், கார்த்தி ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையையும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைக் கேட்ட நீதிபதி, இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மார்ச் மாதம் 8ஆம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார்.

அதன்படி இது தொடர்பான வழக்கு விசாரணை வெள்ளியன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது. அப்போது இந்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25-ம் தேதி வரை தடை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT