இந்தியா

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா? ரகுராம் ராஜன் சந்தேகம்

DIN

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்று சந்தேகம் எழுப்பியுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

'தி தேர்டு பில்லர்' என்ற புத்தகத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தில்லியில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனைபேர் உள்ளனர் என்ற கணக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. அரசு தனது சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி சுய பரிசோதனை செய்ய வேண்டும். 

ஒவ்வொரு அரசாங்கமும் சிறந்த ஆட்சி மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக செய்ய வேண்டியதுதான் சுய பரிசோதனை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன. அதனை பின்நோக்கி பார்த்து அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும். அதனால் உண்மையில் பலன் கிடைத்ததா? அல்லது தோல்வியில் முடிந்ததா? அதிலிருந்து வந்த எதிர்மறை விளைவுகள் என்ன? என ஒவ்வொரு அரசும் சிறந்த நிர்வாகம் செய்யவதற்கு தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு அரசும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று இது.

நாட்டிற்கு வலுவான பரந்த அடிப்படையிலான வளர்ச்சி தேவை, முக்கியமாக பெரும்பாலான மக்களுக்கு நல்ல வேலைகள் தேவை. இந்தியாவின் வளர்ச்சியை விரிவுபடுத்தும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுபவர்களுக்கும், விவசாயத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கும் பரந்த எண்ணிக்கையிலான நல்ல வேலைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு குறித்த நமது புள்ளி விவரங்கள் நீண்டகாலமாக சரியாகவே தெரிவிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பின்மையை போக்க மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. 

வேலை தொடர்பாக நாம் வைத்துள்ள தகவல்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வைத்திருக்கும் தகவல்களை முழுமையாக நம்ப முடியாது. நாம் இன்றும் சரியான தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது. வேலைவாய்ப்பு தகவல்களில் மத்திய அரசு மாற்றங்கள் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழும் இந்த நேரத்தில், நமக்கு வேலை வாய்ப்பு குறித்து நம்பத் தகுந்த ஆவணங்கள் தேவையாக உள்ளதால், ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்தும் ஆவணங்களில் மோசடி செய்யவில்லை என்பதை உலகிற்கு உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். 

மேலும் இந்தியாவில் போதிய அளவில் புதிய வேலைகள் உருவாக்கப்படுவதில்லை. நாட்டிலுள்ள வேலைவாய்ப்பின்மை குறித்து மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பது தனக்கு வருத்தமாக உள்ளது. தேசப் பாதுகாப்பிற்கு வலிமையான உள்நாட்டு பொருளாதாரம் மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வலுவான அடிப்படையான வளர்ச்சி தேவை என்று கூறினார்.

‘மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7-8 சதவீத வளர்ச்சியை அடைய முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT