இந்தியா

பதவியை இழக்கிறாரா மகாராஷ்டிர முதல்வர்?

Muthumari

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

வழக்கமாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விபரங்கள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால், பட்நாவிஸ், தன் மீதுள்ள இரண்டு கிரிமினல் வழக்குகளை வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார். 

இதுகுறித்து வழக்கறிஞர் சதீஷ் யுகே என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பட்நாவிஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், 'பட்நாவிஸ் தன் மீதுள்ள குற்ற வழக்குகளை குறிப்பிடாமல் இருந்தது தவறு தான். இருந்தபோதிலும், வேட்புமனுவில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறிப்பிடத் தேவையில்லை. வழக்குப்பதிவு செய்தால் மட்டும் குறிப்பிட வேண்டியது அவசியம்' என்று கூறி மும்பை நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, முதலில் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பட்நாவிஸ் வேட்புமனுவில் தவறு செய்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவரது முதல்வர் பதவி பறிபோக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் வருகிற நவம்பர் 9ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்திற்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பட்நாவிஸ் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விசாரணை விரைவில் முடிவடையும் பட்சத்தில் பதவிக்காலம் முடியும் முன்பே அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. 

விரைவில் மகாராஷ்டிராவில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பட்நாவிஸ்-க்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT