பஞ்சாப் எல்லையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதலை நடத்தியது. அந்த சமயத்தில் இருந்தே, எல்லையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நமது பாதுகாப்புப்படை வீரர்களால் தீவிரவாதத் தாக்குதல் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவும் எல்லையில் ஒரு பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கில், 20 முகாம்கள் மற்றும் 20 ஏவுதளங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமைத்துள்ளதாக உளவுத்துறை நேற்று தகவல் வெளியிட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூர் ஹதுசைன்வாலா எல்லையில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன் எல்லையைத் தாண்டி உள்நுழைந்தது. இதையடுத்து, உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப் பகுதியை பாகிஸ்தான் கண்காணித்ததா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவும் பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று பஞ்சாபின் ஹுசைனிவாலா பகுதியில் பறந்தது. இரவு 7.20 மணிக்கு ஹசரசிங் வாலா என்ற கிராமத்திலும், இரவு 10.10 மணிக்கு டெண்டிவாலா என்ற கிராமத்திலும் பறந்து வந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம மக்கள் தங்கள் மொபைல் போன்களில் ட்ரோனை படம் பிடித்துள்ளனர்.
கடந்த மாதம் பஞ்சாப் எல்லையில் மீட்கப்பட்ட இரண்டு ட்ரோன்கள் குறித்து ஏற்கனவே பஞ்சாப் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ட்ரோன் பஞ்சாப் எல்லையில் பறந்தது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பதில் தாக்குதலுக்கு தயாராக இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.