இந்தியா

டி.கே. சிவக்குமாரின் பெயரில் 317 வங்கிக் கணக்குகளாம்: பினாமி பெயரில் இருக்கும் சொத்துக்கள் மட்டும்..!

DIN

கருப்புப் பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் அமலாக்கத் துறை காவலை, வரும் 17-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கருப்புப் பணத்தையும், பினாமி சொத்துக்களையும் கூட விடுங்க, பொதுமக்களால் அதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

ஆனால், டி.கே. சிவக்குமாரின் பெயரில் மொத்தம் 20 வங்கிகளில் 317 வங்கிக் கணக்குகள் இருக்கின்றனவாம். இந்த வங்கிக் கணக்குகளில் கணக்கில் வராத அதாவது கருப்புப் பணம் என்று சொல்வார்களே அது மட்டும் ரூ.200 கோடி அளவில் இருப்பில் உள்ளதாம். ஆனால் இந்த பணம் எந்த வகையில் வந்தது என்பதை அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டனர்.

மாதத்துக்கு நூறு, இருநூறு என வரும் சிலிண்டர் மானியத்துக்காக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கிவிட்டு, ஏழை, எளிய மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல, அந்த இரு நூறு ரூபாயைப் பெற தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்று பொதுமக்களை, வங்கிகள் படுத்தும் பாட்டைப் பார்க்கும் போது ஒரே ஒரு வங்கிக் கணக்குக்கே இந்த அளவுக்கு சிரமப்படும் ஏழை மக்கள், 317 வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு சிவக்குமார் வங்கிகளிடம் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருப்பாரோ என்று நினைத்து கவலையில் ஆழ்ந்து விடும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி சிவகுமாரைக் கைது செய்தனர். பின்னர், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 9 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

அமலாக்கத் துறையின் காவல் நிறைவடைந்த நிலையில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என்.நட்ராஜ் முன்வைத்த வாதம்:

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளது; ரூ.800 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் உள்ளன. இதுதொடர்பான பல முக்கிய விவரங்கள் சிவகுமாருக்கு மட்டுமே தெரியும். ஆனால், விசாரணையின்போது மழுப்பலாக அவர் பதிலளிக்கிறார். அதுமட்டுமன்றி, இந்த விவகாரம் தொடர்பாக கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

எனவே, அவரது காவலை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கே.என்.நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது கோரிக்கைக்கு சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். 

வெகுநேரம் நீடித்த வாதத்தின்போது, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிவகுமாரின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு, அதாவது வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதலில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்; பிறகுதான் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும்.

சிவகுமாரை அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர்கள் நாளொன்றுக்கு அரை மணி நேரம் சந்திக்கலாம். மேலும், சிவகுமார் தனது மருத்துவர் ரங்கநாதனைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT