இந்தியா

அயோத்தி விவகாரம்: மிரட்டல் வருவதாக வழக்குரைஞர் தொடுத்த வழக்கு முடித்து வைப்பு

DIN

அயோத்தி வழக்கை விசாரித்து வரும் முஸ்லிம் தரப்பு வழக்குரைஞருக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து, அந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. 
இதில், முஸ்லிம் அமைப்பான சன்னி வக்ஃபு வாரியம் மற்றும் எம்.சித்திக் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன் ஆஜாராகி வாதாடி வருகிறார். அவர், உச்சநீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 
அதில், அயோத்தி வழக்கில் தாம் ஆஜராகக் கூடாது என்று மிரட்டல் விடுத்து என்.சண்முகம் என்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜீவ் தவண் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், என்.சண்முகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சண்முகம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் என்று அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ராஜீவ் தவன் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிடுகையில், ராஜீவ் தவணுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய சண்முகம் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. அதேநேரத்தில், எந்தவொரு வழக்கிலும் ஆஜராகும் வழக்குரைஞருக்கும் மிரட்டல் விடுக்கக் கூடாது என்ற செய்தி நாடு முழுவதும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.
இதையடுத்து, இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என்று சண்முகத்தை எச்சரித்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT