கொல்கத்தாவில் பதற்றம்: சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்; முதல்வர் மம்தா ஆலோசனை
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் கைது செய்யப்படலாம் என்று சிபிஐ அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
"ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எனவே விசாரணை நடத்துவதற்காக அவரை தேடி வருகிறோம். கடைசி முயற்சியாக அவர் கைது செய்யப்படலாம்" என்றனர்.
இந்நிலையில், ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு இன்று அவரது இல்லத்துக்கு சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. தகவலறிந்து ராஜீவ் குமார் இல்லத்துக்கு விரைந்த போலீஸார், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த போதிய ஆவணங்கள் உள்ளதாக என்று கேட்டனர். அதன்பிறகு, 5 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா டிஜிபி, கொல்கத்தா மேயர் ஆகியோர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விரைந்தனர். அங்கு தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், ராஜீவ் குமார் இல்லத்துக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மோசடி வழக்குகளை விசாரித்த மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு ராஜீவ் குமார் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.