தெருவோர நாய்களுக்கு உணவளியுங்கள்: எடியூரப்பா கோரிக்கை
பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தெரு நாய்களுக்கு குடிநீர் மற்றும் உணவளிக்குமாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தெரு நாய்களுக்கு குடிநீர் மற்றும் உணவளிக்குமாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடும் வெயில் மற்றும் ஊரடங்கு நடவடிக்கையால் தெருவோரத்தில் வசிக்கும் நாய்கள், பூனைகள், பறவைகள் போன்றவை உணவும் குடிநீரும் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் நகர்ப் பகுதிகளில் நிலைமை மிக மோகமாக உள்ளது. எனவே நான் மக்களை ஒன்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் பகுதிகளில் வாழும் தெருவோர விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவளியுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், பூனை ஒன்றுக்கு பாத்திரத்தில் பால் கொடுக்கும் தனது புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.
உணவகங்களில் வீணாகும் உணவுகளை உண்டு வந்த ஏராளமான விலங்குகள் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் உணவின்றி தவித்து வருகின்றன. எனவே, விலங்குகளுக்கும் உணவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.