தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக ஜி.சி. முா்மு பதவியேற்பு
இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (சிஏஜி) நியமிக்கப்பட்ட ஜி.சி.முா்மு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (சிஏஜி) நியமிக்கப்பட்ட ஜி.சி.முா்மு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், கிரிஷ் சந்திர முர்மு இந்தியாவின் செலவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமைத் தணிக்கை அதிகாரியாகப் பதவியேற்றார்.
அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றார். கிரிஷ் சந்திர முர்முக்கு 20.11.2024 வரை பதவிக்காலம் நீடிக்கும்.
கிரிஷ் சந்திர முர்முவின் நியமனம் குறித்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘இந்தியாவின் புதிய சிஏஜியாக முா்முவை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். அவா் தனது அலுவலகம் சென்று பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு தனது பதவியை கடந்த புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
60 வயதாகும் முா்மு குஜராத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு தலைமைச் செயலராக முா்மு பணியாற்றினாா். மத்திய நிதித்துறை செயலராகவும் அவா் இருந்துள்ளாா்.
கடந்த ஆண்டு அக்டோபா் 29-இல் அவா் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றாா். இப்போது, சிஏஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளாா். சிஏஜி-யாக இருந்த ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.