ஹரியாணா முதல்வர் இல்லம் முற்றுகை: இளைஞர் காங்கிரஸார் கைது
ஹரியாணா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
ஹரியாணா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பரிந்தர் தில்லோன் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் தடுத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
இதனைக் கண்டித்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் ஹரியாணா முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதனையொட்டி முதல்வர் இல்லத்திற்கு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே தடுப்புகளை அமைத்து காவலர்கள் குவிக்கப்பட்டனர். எனினும் இளைஞர் காங்கிரஸார் சிலர் தடுப்புகளை மீறி முதல்வர் இல்லத்தை நோக்கி முன்னேறினர்.
அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். விவசாயிகளுக்கு எதிரான ஹரியாணா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் இளைஞர் காங்கிரஸார் தெரிவித்தனர்.