தில்லி - ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் காவல்துறையினர் குவிப்பு
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லி - ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லி - ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தென்மேற்கு தில்லியினுள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கேர்கி டெளலா சுங்கச்சாவடியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக தில்லி நோக்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேரணியில் ஈடுபட்டனர். மேலும், காஸியாபாத் அருகே தில்லி - உத்தரப்பிரதேச எல்லையை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனிடையே தென்மேற்கு தில்லியினுள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கேர்கி டெளலா சுங்கச்சாவடியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.