விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் தலையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு: சஞ்சய் ரௌத்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு கிடைத்துவிடும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு கிடைத்துவிடும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் புதன்கிழமை தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த 21 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சஞ்சய் ரௌத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தது:
"பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களுடன் அரசு அமர்ந்து பேசினால் 30 நிமிடங்களில் தீர்வு கிடைத்துவிடும். பிரதமரே தலைமையிட்டால் 5 நிமிடங்களில் தீர்வு கிடைத்துவிடும் என நினைக்கிறேன். அவர்கள் இந்திய விவசாயிகள். அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்."