மகாராஷ்டிர கிராமத்தில் 300 குரங்குகள் அட்டகாசம்: பயிர்கள், வீடுகள் சேதம்
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள், மக்களை கடித்தும், பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளன.
ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள், மக்களை கடித்தும், பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளன.
உப்லா கிராமத்தில் பல காலமாக ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாகத்தான் குரங்குகள் மனிதர்களை தாக்குவது அதிகரித்திருப்பதாக கிராமத்தினர் கூறுகிறார்கள்.
இது பற்றி வனத்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குரங்குகள் அட்டகாசம் பற்றி இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.
சில்லோத் தாலுகாவை ஒட்டியிருக்கும் இந்த சிறு கிராமத்தில் சுமார் 1600 குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது குரங்கு பயம் காரணமாக பலர் இந்த கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
வீட்டில் சமையல்கூடங்களுக்குள் நுழையும் குரங்குகள், அங்கிருக்கும் உணவுப் பொருள்களை அள்ளிச் சாப்பிடுவதும், தடுக்கும் கிராம மக்களை பயங்கரமாக தாக்குவதும் வழக்கமாக உள்ளது. இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உள்ளனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கும் உப்லா கிராமத்தில், பல வீடுகளின் மேற்கூரைகளைக் கூட குரங்கள் பிய்த்து எரிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த கிராமத்துக்கு அருகே எந்த வனப்பகுதியும் இல்லை, ஆனால் ஒரு குன்று இருக்கிறது. அங்கிருந்துதான் இந்த குரங்குகள் இங்கு வருகின்றன என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.
வயலில் வேலை செய்யும் குடும்பத்தினருக்கு சப்பாத்தியை கொண்டு சென்றால் வழியிலேயே அதனை குரங்குகள் பிடுங்கிக் கொள்வதும் தொடர்கதையாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.