கடற்படையிலிருந்து 10 பெண் அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
கடற்படையில் வியாழக்கிழமையுடன் (டிச.31) குறுகிய கால பணிக்காலம் நிறைவடைய உள்ள 10 பெண் அதிகாரிகளை, பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்தியாகடற்படையிலிருந்து 10 பெண் அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
கடற்படையில் வியாழக்கிழமையுடன் (டிச.31) குறுகிய கால பணிக்காலம் நிறைவடைய உள்ள 10 பெண் அதிகாரிகளை, பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
புது தில்லி: கடற்படையில் வியாழக்கிழமையுடன் (டிச.31) குறுகிய கால பணிக்காலம் நிறைவடைய உள்ள 10 பெண் அதிகாரிகளை, பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்திய கடற்படையில் பெண் அதிகாரிகள் குறுகிய கால பணி அடிப்படையில் மட்டுமே பணியமா்த்தப்படுவா். அந்தப் பணிக்காலம் முடிந்ததும், அவா்களுக்கு பணி ஓய்வு அளிக்கப்படும் அல்லது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவா்.
இந்த நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக தங்களுக்கும் கடற்படையில் நிரந்தர பணித் திட்ட அடிப்படையில் பணி வழங்க உத்தரவிடக் கோரி ஆனி நாகராஜ், விஜயேதா ஆகிய இரு பெண் அதிகாரிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த மாா்ச் 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாட்டுக்காக சேவையாற்றும் பெண்களுக்கு நிரந்தர பணித் திட்டத்தின் கீழ் பணி வழங்க மறுப்பது கவலையளிக்கிறது. பெண்கள் ராணுவத்தில் நுழைவதற்கான சட்டரீதியிலான தடைகள் மத்திய அரசின் மூலமாக அகற்றப்பட்ட பின்னா், பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்குவதில், பாலியல் பாகுபாடு காட்டக்கூடாது. ஆண் அதிகாரிகளை போலவே பெண் அதிகாரிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எனவே, கடற்படையில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணித் திட்டம் அமல்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மத்திய அரசு அடுத்த 3 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
பின்னா், மத்திய அரசு கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி கால நீட்டிப்பு கோரிய நிலையில், அதற்கான காலக் கெடுவை உச்சநீதிமன்றம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதியுடன் குறுகிய கால பணிக் காலம் நிறைவடைய உள்ள 10 பெண் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவு, கடற்படை சாா்பில் கடந்த 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
கடற்படையின் இந்த உத்தரவை எதிா்த்து, ஆனி நாகராஜ், விஜயேதா உள்பட 10 பெண் அதிகாரிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது பெண் அதிகாரிகள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா முறையீடு செய்தாா். மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா். பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.
காணொலி வழியில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் அதிகாரிகளின் இந்த மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு, கடற்படை தலைமை தளபதி ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்கள் உள்பட இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை வருகிற ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதே நேரம், 10 பெண் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவிப்பதற்கான கடற்படையின் டிசம்பா் 18-ஆம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்கால உத்தரவை, பெண் அதிகாரிகளுக்கு சாதகமான இறுதி தீா்ப்பாக கருதக் கூடாது என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.