உயிருக்குப் போராடியவருக்கு காணொலி வழியாக சிகிச்சை அளித்து உயிரைக் காத்த தில்லி மருத்துவர்
கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
புது தில்லி: கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு மருந்தாளுநர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது நண்பர் கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை கடுமையாக மோசமடைந்திருப்பதாகவும், மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக அவருக்கு மருத்துவர் உஷத் திர், உதவ முன் வந்தார். கணொலி வாயிலாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நோயாளி இருந்த இடத்தில் செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால், நோயாளியை ஒரு சிறிய படகில் ஏற்றினர். படகில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். நல்ல வேளையாக, மருந்தாளுநர், மருத்துவர் கொடுத்த மருந்துகளை நன்கு புரிந்து கொண்டு, ஊசி செலுத்தவும் தெரிந்திருந்ததால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடனடியாக அவரது உடல்நிலை சீரடைந்ததும், ஒரு ஆண்டுக்கு அவரது உடலை சீராக வைத்திருக்க உதவும் மருத்துவ உபகரணங்களயும் சர் கங்கா ராம் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பொதுமுடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டதும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பணம் செலுத்தி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளியை தில்லி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் திர் கூறியுள்ளார்.
நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது நண்பர் ரெஹ்மான் கூறியுள்ளார்.