மாலத்தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர்
மாலத்தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ என் எஸ் ஜலஷ்வா மூலம் கொச்சி துறைமுகம் இன்று வந்து சேர்ந்தனர்.
மாலத்தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் கொச்சி துறைமுகம் இன்று வந்து சேர்ந்தனர்.
கரோனா வைரஸ் நோய் பரவி வந்ததையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளில் சிக்கியவர்கள் நாடு திரும்ப முடியவில்லை. இவர்கள் நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களை ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கப்பல் கடந்த 15ஆம் தேதி 588 இந்தியர்களுடன் மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை, புயல் காரணமாக கப்பல் 16ஆம் தேதிதான் புறப்பட்டது. இந்த கப்பல் இன்று கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. பயணிகளில், 6 கர்ப்பிணிகள் உள்பட 70 பெண்கள் இருந்தனர்.
இவர்களை மாநில கடற்படை, மாவட்ட நிர்வாகத்தினர், துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களுக்கு கொவைட் 19 தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் இவர்கள் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.